லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் 'லியோ' இந்த படத்தில் திரை பட்டாளங்கள் பலர் நடித்துள்ளனர். இந்த படம் பல எதிர்ப்புகளை கடந்து திரையில் வெளியானது. லோகேஷ், விஜய் இருவரும் ஏற்கனவே மாஸ்டர் படத்தின் மூலம் இணைத்திருந்தனர். இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளனர். செவன் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் லியோ படம் உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது.
இதனிடையே கடந்த ஒரு வாரமாக லியோ படத்திற்கான டிக்கெட் முன் பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இருப்பினு ரசிகரக்ளுக்கு டிக்கெட் கிடைக்காமல் நிர்ணயித்த தொகையை விட அதிக விலை கொடுத்து வாங்க நேர்ந்தது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வரவிருப்பதால் அடுத்த ஒரு வாரத்திற்கு படத்தின் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தது. இப்படியான நிலையில் லியோ படத்தை தமிழகத்தில் காலை 4 மணிக்கு வெளியிட தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. ஆனால் அன்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் படம் அதிகாலை 4மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.
இருப்பினும் தமிழகத்தில் மட்டும் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சியாக இருந்தது. ரசிகரக்ள் இரவில் இருந்தே திரையரங்கிற்கு வர ஆரம்பித்தனர். மேலும், தியேட்டரில் எங்கு திரும்பினாலும் விஜயின் கட் அவுட், தோரணங்கள் என விடிய விடிய திருவிழா போல் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் வெளியான நிலையில், எல்லைப்பகுதியில் உள்ள கோவை ரசிகர்கள் பாலக்காட்டிற்கு படையெடுத்தனர். பாலகாட்டில் உள்ள திரையரங்கில் விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் நடனமாடி கொண்டாடினர். மேலும் திரையரங்கு முன்பாக தேங்காய்கள் உடைத்தும், விஜய் படத்திற்கு பால் அபிசேகம் செய்தும் கொண்டாடினர்.
கோவை மாவட்டத்தில் திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு லியோ திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. இதற்காக காலை முதல் ஏராளமான விஜய் ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு குவிந்தனர். ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கில் நீண்ட வரிசையில் காத்திருந்த விஜய் ரசிகர்கள், திரைப்படத்தை காண சென்றனர். அப்போது பேசிய விஜய் ரசிகர்கள், “தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருந்தாலும், திமுக இருந்தாலும் விஜய் படத்திற்கு பிரச்சனை வருகிறது. தமிழ்நாட்டில் பிறந்ததற்கு பதிலாக, கேரளாவில் பிறந்திருக்கலாம். கேரளாவில் லியோ படத்திற்கு 4 மணிக்கு அனுமதி அளித்துள்ளார்கள். தமிழன் படத்தை தமிழன் பார்க்க முடியாது என்றால் என்ன நியாயம்? அவர்கள் யூடியூப்பில் ரிவியூ கொடுப்பதை நாங்கள் பார்க்க வேண்டுமா? என சரமாரியாக சாடினார்.
கேரளா மாநிலத்தில் 4 மணி காட்சிகளை பார்த்துவிட்டு யூடியூப்பில் ரிவியூ வெளியானதால் தமிழ்நாட்டில் ரசிகர்கள் லியோ படம் மீதான எதிர்பார்ப்பு சற்று குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். இருப்பினும் 9 மணிக்கு அனுமதி கொடுத்து தமிழ்நாட்டில் சில தியேட்டர்களில் படத்தை 10மணிக்கு மேல் வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் சோகத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். லியோ படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய போது பொறுமை காத்த ரசிகர்கள், இன்று படம் வெளியான போது தங்களிடம் இருந்த கோவத்தை மற்ற மாநிலங்களை குறிப்பிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.