சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக கோயம்பேடு பேருந்து நிலையம் திகழ்ந்து வந்தது தமிழகத்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கிய பேருந்து நிலையமாக அறியப்பட்டு வந்த கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. பள்ளி கல்லூரி விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் திருவிழா கூட்டம் போல் பரபரப்பாக பேருந்துகளின் ஆரன் மற்றும் மக்களின் பேச்சு சத்தத்துடன் கூட்டம் கூட்டமாக பயணிகள் நடமாடிய முக்கிய நிலையம் கோயம்பேடு! அதே சமயத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆம்னி பேருந்து நிலையமும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நிகரான கூட்டங்களை விடுமுறை நாட்களில் கொண்டிருக்கும். இந்த பேருந்து நிலையங்களை சுற்றி அமைந்திருக்கும் தின்பண்ட கடைகள் உணவு விடுதிகள் மற்றும் எலக்ட்ரானிக் கடைகள் அனைத்துமே ஒரு நாளில் குறைந்த பட்சம் 5,000 வரையில் வருமானத்தை ஈட்டி கொடுக்கும், மேலும் மூன்று சக்கர வாகனங்களான ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மினி ஆட்டோக்கள் அனைத்திற்கும் பெரும் வாழ்வாதாரத்தை கோயம்பேடு பேருந்து நிலையம் வழங்கி வந்தது ஏனென்றால் அவர்கள் அனைவருக்கும் தினந்தோறும் ஆயிரம் ரூபாயாவது கிடைக்கும் அளவிற்கு சவாரிகள் கிடைப்பதற்கான வாய்ப்பை கோயம்பேடு நிலையம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
அதோடு வெளிமாநிலங்களில் இருந்து வரும் பலருக்கும் கோயம்பேடு ஒரு முக்கிய இடமாகவும் தொடக்கப் புள்ளியாகவும் அமைந்தது. வெளிமாநில பயணிகளை தாண்டி உள்ளூர் பயணிகளுக்கும் கோயம்பேடு ஒரு மைய புள்ளியாகவும் கோயம்பேட்டிலிருந்து அவர்கள் வீடு அல்லது அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எளிதில் செல்லும் வகையில் போக்குவரத்து வசதிகள் கிடைக்கும் வகையிலும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இன்று இந்த நிலைமை முற்றிலுமாக மாறி கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது வெறிச்சோடி காணப்படுவதற்கு முக்கிய காரணம் வண்டலூரில் அருகில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.எதற்காக வண்டலூர் தாண்டி கிராமத்தில் ஒரு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று அரசை நோக்கி முதல் கேள்வி வைக்கப்படும் பொழுது அதற்கு பதிலாக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சிட்டி அவுட்டரில் ஒரு பேருந்து நிலையத்தை அமைத்துள்ளோம்! இதன் மூலம் சென்னை மாநகரத்துக்குள் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் 393.74 கோடி ரூபாய் மதிப்பீட்டு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அதனை கடந்த டிசம்பர் 30-ம் தேதி அன்று முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகவும் பல வசதிகளுடன் சிஎம்டிஏ வால் அமைக்கப்பட்டுள்ளது. இனி கோயம்பேட்டில் இயங்குகின்ற பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தென் தமிழகப் பகுதிகளுக்கு செல்லும் என்றும் கூறப்பட்டது, பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிளாமக்கத்தில் " எங்கள் பேருந்துகளை நிறுத்துவதற்கு போதிய விலை வசதிகள் இல்லை என்றும் போக்குவரத்து நெரிசல் எப்படி என்றாலும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது"! என குற்றம் சாட்டினர்.
அதே சமயத்தில் கோயம்பேட்டில் தனது வாழ்வாதாரத்திற்காக கடை வைத்துக் கொண்டிருந்த கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கிட்டத்தட்ட 70 சதவீதம் வருமானம் குறைந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். அதோடு அப்பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவர்களும் வருமானம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் கிளாம்பாக்கத்தில் இருக்கும் கடைகளில் எங்களுக்கு எந்த கடையுமே ஒதுக்கப்படவில்லை அங்கு இருக்கும் இடங்கள் முழுவதும் ஹைப்ராண்ட் கடைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர், அப்படி இருந்தால் நாங்கள் எப்படி பிழைப்பது பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று வேதனையுடனும் கண்ணீருடனும் கடை உரிமையாளர்கள் கோயம்பேட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.