
தமிழகத்தின் தொழில் இதயம் என்று அழைக்கப்படும் திருப்பூர் மாநகரம், இன்று பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியிருப்பது ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த ஆறு பயங்கரவாத ஆதரவாளர்கள், பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் கைகோர்த்து நாசவேலைக்குத் திட்டமிட்ட விவகாரம், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், உளவுத்துறையின் மரணத் தூக்கத்தையும் அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது.
"விடியா அரசு" என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படும் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு என்பது ஏட்டளவில்கூட இல்லை என்பதற்கு இதுவே சாட்சி. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கள்ளச்சாராயமும், போதைப்பொருள் புழக்கமும் தலைவிரித்தாடும் வேளையில், இப்போது தீவிரவாத ஊடுருவலும் சர்வ சாதாரணமாகிவிட்டது. நம் மண்ணில் தங்கியிருந்து கொண்டே, பகிரங்கமாக முகநூலில் பாகிஸ்தான் ஆதரவுப் பிரசாரம் செய்யும் துணிச்சல் இந்த அந்நிய ஊடுருவல்காரர்களுக்கு எப்படி வந்தது? "யார் நம்மை என்ன செய்துவிட முடியும்?" என்ற அவர்களின் மமதைக்கு, திமுக அரசின் மெத்தனப் போக்கே முக்கியக் காரணம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் உளவுத்துறை, அரசியல் பழிவாங்கல்களிலும், எதிர்க்கட்சிகளைக் கண்காணிப்பதிலும் காட்டும் ஆர்வத்தில் ஒரு சதவீதத்தைக் கூட மாநிலப் பாதுகாப்பில் காட்டவில்லை என்பது தெரிகிறது. டெல்லி காவல்துறை மோப்பம் பிடித்து வந்து திருப்பூரில் குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை, தமிழகக் காவல்துறைக்குத் தகவல் தெரியவில்லை என்பது தலைகுனிய வேண்டிய விஷயம். தமிழக உளவுத்துறை என்பது வெறும் காட்சிப் பொருளாக மாறிவிட்டதா அல்லது ஆட்சியாளர்களின் கைபாவையாகச் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
2022-ல் கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தையே "சிலிண்டர் வெடிப்பு" என்று மழுப்ப முயன்ற இந்த அரசு, இப்போது திருப்பூரில் நிகழ்ந்துள்ள இந்த அபாயகரமான ஊடுருவலையும் சாதாரண ஒன்றாகக் கடந்து செல்லப் பார்க்கிறது. மாநிலத்தின் பாதுகாப்பு என்பது விளையாட்டல்ல. வேலையில்லாத் திண்டாட்டத்தால் வடமாநிலத் தொழிலாளர்கள் குவியும் வேளையில், அவர்களை முறையாகப் பதிவு செய்யவோ, கண்காணிக்கவோ தவறியதன் விளைவை இன்று தமிழக மக்கள் அனுபவிக்க நேரிட்டுள்ளது.
இதற்குக் காரணம் திமுகவின் ஆபத்தான "வாக்கு வங்கி அரசியல்" என்பதுதான் கசப்பான உண்மை. ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், தீவிரவாத ஊடுருவல்களைக் கூட மென்மையான போக்கோடு கையாள்வது இந்த அரசின் வாடிக்கையாகிவிட்டது. உளவுத்துறை என்பது இப்போது ஆட்சியாளர்களின் அரசியல் எதிரிகளைக் கண்காணிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறதே தவிர, தேசப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படுவதில்லை.
அண்டை மாநிலங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படும்போது மத்திய அரசை விமர்சிக்கத் தெரிந்தவர்களுக்கு, தங்கள் சொந்த மாநிலத்தில் தீவிரவாதிகள் பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்துக் கொண்டு நாசவேலைக்குத் திட்டமிடுவதைத் தடுக்கத் தெரியவில்லை. இது உளவுத்துறையின் தோல்வி மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுக அரசின் நிர்வாகத் தோல்வி. தமிழகம் குட்டி வங்கதேசமாக மாறுவதற்கு முன்பாவது, அரசு விழித்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் சோதனைகளை நடத்த வேண்டும். இல்லையெனில், வரலாறு இந்த அரசை ஒருபோதும் மன்னிக்காது.
