24 special

வெளிவந்த ஆதரங்கள் ஸ்டாலினின் ஐவர் அணிக்கு வைத்த செக்-மேட்! டெல்லி விரித்த வலை... சிக்கிய திமிங்கலங்கள்

MKSTALIN
MKSTALIN

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் திமுக அரசுக்குச் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய நெருக்கடி உருவாகத் தொடங்கியுள்ளது. திமுகவின் உண்மையான பலமாகத் திகழும் அதன் மாவட்டச் செயலாளர்களும் செல்வாக்குமிக்க அமைச்சர்களுமான ஸ்டாலினின் "தளபதிகள்" ஒவ்வொருவராக ஊழலில் சிக்கி வருவது அறிவாலயத்தை அதிர வைத்துள்ளது. குறிப்பாகச் செந்தில் பாலாஜி முதல் கே.என்.நேரு வரை நீளும் இந்த ஊழல் புகார் பட்டியல் திமுகவின் நிர்வாகத் தூண்களை ஆட்டம் காணச் செய்துள்ளது.


சென்னை உயர்நீதிமன்றம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யத் தமிழக காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஐ. பெரியசாமி என ஒரு பெரும் பட்டாளமே அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், நேருவின் விவகாரம் திமுகவிற்குப் பேரிடியாக இறங்கியுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் வெறும் அமைச்சர்கள் மட்டுமல்ல, அந்தந்த மண்டலங்களில் திமுகவின் தேர்தல் இயந்திரத்தை இயக்கும் அச்சாணிகள் ஆவர். கொங்கு மண்டலத்தைச் செந்தில் பாலாஜியும், வட தமிழகத்தைப் பொன்முடியும், வேலூர் பகுதியைத் துரைமுருகன் குடும்பமும், டெல்டா பகுதியை நேருவும், தென் தமிழகத்தை அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஐ. பெரியசாமியும் கட்டுப்படுத்தி வரும் நிலையில், இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சட்டப் போராட்டங்களை எதிர்கொள்வது ஸ்டாலினுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

கொங்கு மண்டலத்தைச் சதுரங்க வேட்டை ஆடிய செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் என்ற பழைய விவகாரத்தில் சிக்கி 471 நாட்கள் சிறையில் கழித்தது அக்கட்சியின் நிதி மற்றும் நிர்வாகப் பலத்தைக் கடுமையாகப் பாதித்தது. தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்தாலும் அமைச்சர் பதவியில் இல்லை என்பதும் சட்டச் சிக்கல்கள் தொடர்வதும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் விழுப்புரம் மண்டலத்தின் மூத்த முகமான பொன்முடி சொத்துக்குவிப்பு மற்றும் செம்மண் குவாரி விவகாரங்களில் சிக்கித் தனது அமைச்சர் பதவியைப் பறிகொடுத்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு மற்றும் அவரது பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்ட விவகாரம் தென் மாவட்டங்களில் திமுகவின் பிம்பத்தைச் சிதைத்துள்ளது. வேலூர் பகுதியில் கதிர் ஆனந்த் மீதான மணல் குவாரி மற்றும் தேர்தல் பண விவகாரங்கள் ஏற்கனவே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

இந்த வரிசையில் திருச்சியின் முகமாகவும் கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் இருக்கும் கே.என்.நேரு தற்போது நகராட்சி நிர்வாகத் துறை ஊழல் புகாரில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 2,516 பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பாய உள்ளது. தனது நம்பிக்கைக்குரிய தளபதிகள் வரிசையாக நீதிமன்றப் படிக்கட்டுகளை மிதிப்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. திமுக இதனை அரசியல் பழிவாங்கல் என்று முழக்கமிட்டாலும், நீதிமன்றங்கள் முன்வைக்கும் ஆதாரங்களும் தொடர்ச்சியான ரெய்டுகளும் பொதுமக்களிடையே ஒரு எதிர்மறையான பிம்பத்தை விதைத்து வருகின்றன. 2026 தேர்தலுக்குத் தயாராகும் வேளையில், கட்சியின் தேர்தல் நிதியையும் நிர்வாகத்தையும் கவனிக்கும் முக்கியத் தலைவர்கள் முடக்கப்பட்டால், அது திமுகவின் வெற்றியைப் பாதிக்கும் என்பது நிதர்சனம். ஆட்டம் இப்பதான் ஆரம்பம் என்பது போலத் தொடுக்கப்படும் இந்தச் சட்டப் போராட்டங்கள் தமிழக அரசியலில் வரும் நாட்களில் இன்னும் பெரும் புயலைக் கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.