புதுதில்லி : 2002ல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உட்பட 63 பேர் மீது வழக்கு தொடுத்திருந்தது. குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கில் பிரதமர் மோடி மீது குற்றம் சுமத்த காரணமே இல்லை என கூறி நீதிமன்றம் வழக்கில் அவரை குற்றமற்றவர் என கூறி மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
ஆனால் காங்கிரஸ் தலைவர் மற்றும் மறைந்த ஜகாரியாவின் மனைவியான ஜாப்ரி ஜகாரியா மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் கடந்த இருநாட்களுக்கு முன்னர் இது புனையப்பட்ட வழக்கு என கூறியதுடன் இந்த மனுவில் பொய்களே நிறைந்திருப்பதாகவும் யாரோ ஒருவர் ஆணைப்படி வடிவமைக்கப்பட்ட மனு என கூறியதோடு அதிகார துஷ்பிரயோகம் செய்து இந்த மனுவை அளித்தவர்கள் மீது வழக்கு பதியும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தனியார் செய்திநிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த மத்திய அமைச்சர் அமித்ஷா "பிரதமர் நரேந்திர மோடி மீது உள்நோக்கத்தோடு அரசியல் பழிவாங்கல் முயற்சியில் குற்றசாட்டுகள் கூறிய அனைவரும் மன்னிப்பு கேட்கவேண்டும். குற்றம் சுமத்தியவர்களுக்கு மனசாட்சி இருந்தால் அவர்கள் பிஜேபியிடமும் பிரதமர் மோடியிடமும் மன்னிப்பை கோரவேண்டும்.
மோடி மீது வழக்கு தொடுத்தபோது அவர் எதிர்க்கவில்லை. அவரை விசாரித்தபோது பிஜேபி போராடவில்லை. ஆனால் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் விசாரிக்கப்படும்போது காங்கிரசார் போராடுகின்றனர். இந்த ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பு எப்படி மதிக்கப்படவேண்டும் என்பதற்கு அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டை பிரதமர் முன்வைத்துள்ளார்.
பிரதமர் மோடியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் இங்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தியா முழுவதும் தொண்டர்கள் மோடிக்கு ஆதரவாக போராட களம் இறங்கவில்லை. சட்டத்திற்கு நாங்கள் ஒத்துழைத்தோம். நானும் கைதுசெய்யப்பட்டேன். ஒரு நீண்ட போருக்கு பிறகு உண்மை வெளிவரும்போது அது தங்கத்தை விட பிரகாசிக்கும்.
சிவபெருமான் விஷம் அருந்தி தொண்டையில் அடைத்தது போல 18-19 வருடங்கள் மோடி ஜி வலியை தாங்கிக்கொண்டார். அவர் அந்த வலியை தாங்கிக்கொண்டதை நான் உணர்ந்தேன்" என அந்த செய்தி நிறுவனத்திடம் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.