சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலையொட்டி கான்கெர் நகரில் பாஜக சார்பில் கடந்த 2-ம் தேதிநடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அப்போது கூட்டத்தில் தனது ஓவியத்தை தூக்கிப் பிடித்தவாறு ஒரு சிறுமி நீண்ட நேரமாக நிற்பதை கவனித்த பிரதமர், தனது உரையை நிறுத்திவிட்டு, அச்சிறுமியை அமருமாறு கேட்டுக்கொண்டார்.மேலும் அந்த ஓவியத்தை வாங்கி வருமாறு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினார். ஓவியத்தின் பின்புறத்தில் முகவரியை எழுதுமாறு சிறுமியிடம் கேட்டுக்கொண்ட பிரதமர், ‘உனக்கு நான் கடிதம் எழுதுகிறேன்” என்றும் சிறுமியிடம் உறுதி கூறினார்.
இந்நிலையில் அகன்ஷா தாக்குர் என்ற அந்த சிறுமிக்கு பிரதமர் மோடி, தான் கூறியவாறு கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர் மோடி தனது கடிதத்தில், “டியர் அகன்ஷா உனக்கு எனது வாழ்த்துகள் மற்றும் ஆசீர்வாதங்கள். கான்கெர் கூட்டத்தில் நீ கொண்டுவந்த ஓவியம் என்னை அடைந்தது. உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி.உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெறும் இந்த பாசமும், அன்பும் தேச சேவையில் எனது பலமாக உள்ளது. எங்கள் மகள்களுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் வசதியான தேசத்தை உருவாக்குவதே எங்கள்நோக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி மேலும் தனது கடிதத்தில் கூறும்போது, “சத்தீஸ்கர் மக்களிடம் இருந்துஎனக்கு தொடர்ந்து கிடைத்துவரும் பாசத்திற்கு நன்றி. தேசத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் உங்களின் தீவிர ஈடுபாட்டை பாராட்டுகிறேன். இளம் தலைமுறையினருக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானதாகும். இளம் தலைமுறையின் விருப்பங்களை வடிவமைப்பதிலும், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதிலும் இந்த கால கட்டம் மிக முக்கியப் பங்கு வகிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.சொன்னபடி தனக்கு பிரதமர் கடிதம் எழுதியதை பார்த்து சிறுமி ஆச்சர்யத்தில் மெய் சிலிர்த்து போய்விட்டார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அன்பை பெற்ற தலைவராக மோடி தொடர்ந்து நீடித்து வருவது பாஜகவின் அசுர பலமாக பார்க்க படுகிறது.