சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் உண்மையா? தவறான தகவலா என சோதனை செய்து பார்க்காமல் பகிர பட்ட நிகழ்வுகள் ஒரு ஊரையே கொந்தளிபில் ஆழ்தும் என்றால் அதற்கு தற்போதைய உதாரணமாக அமைந்து இருக்கிறது திருப்பூர் வீடியோ சம்பவம்.
திருப்பூரில் வட மாநில இளைஞர்கள் தமிழர்களை தாக்கியதாக யாரோ ஒருவர் தவறான தகவலை பகிர அதனை உண்மை என நம்பி ஊடகங்கள் தொடங்கி சில பிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்தனர், நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவும் ஆவேசமாக வீடியோ வெளியிட்டு வட மாநில தொழிலாளர்களை கண்டித்து இருந்தார்.
இந்த நிலையில் திருப்பூரில் நடைபெற்ற சம்பவம் உண்மை இல்லை என்றும் அது தவறான தகவல் என்ற உண்மையை திருப்பூர் காவல்துறை தெளிவு படுத்தி இருக்கிறது,
இது குறித்து காவல்துறை தரப்பில் தனி படை அமைக்கப்பட்டதுடன், சைபர் கிரைம் உதவியை போலீசார் நாடி இருக்கின்றனர், தவறாக சித்தரித்து வீடியோ பரப்பியவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்து இருப்பதுடன் என்ன நடந்தது என்பதை தெளிவு படுத்தி இருக்கின்றனர்.
அதில், இந்தச் சம்பவம் கடந்த 14ஆம் தேதி திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் நடந்துள்ளது. அன்றைய தினம் அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் டீ குடிக்க மாலையில் அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களில் சிலர் பெட்டிக்கடையில் புகைபிடித்ததுள்ளனர். அப்போது அங்கு நான்கு தமிழக இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது வடமாநில இளைஞர் தன் மீது வேண்டுமென்ற சிகரெட் புகையை விட்டதாகத் தமிழக இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
மேலும், வடமாநில தொழிலாளி ஒருவரை மதுபோதையில் இருந்த அந்த தமிழக இளைஞர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கு பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற வடமாநில தொழிலாளர்களை இதைப் பார்த்தும் தமிழக இளைஞர்களை நோக்கி ஓடி வந்துள்ளனர். அத்தனை பேர் திடீரென வருவதைக் கண்டு அஞ்சி தமிழக இளைஞர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். அன்றைய தினம் இது தான் நடந்துள்ளது.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் அங்கு வந்துள்ளனர்.போலீசார் வருவதைப் பார்த்தும் தமிழக இளைஞர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதேபோல வடமாநில இளைஞர்களும் போலீசாரை கண்டதும் அமைதியாக பணிக்குத் திரும்பியுள்ளனர். இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என்பதால் போலீசாரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சம்பவம் நடந்த போது, அங்கிருந்த ஒருவர் இதை வீடியோவாக எடுத்தும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவே இப்போது இணையத்தில் வேறு விதமாகப் பரவி வருவது தெரிய வந்துள்ளது.
இந்த சூழலில் இந்த விவாகரத்தில் உண்மையான தகவலை சோதனை செய்யாமல் பரப்பியவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்க பட்டு இருப்பதால் மதுரை முத்துவும் விசாரணைக்கு அழைக்க பட இருப்பதாக கூறப்படுகிறது.