மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி, அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவர் நிறுவிய ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம், மாதவிடாய் காலத்திலும் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்ததால், 1980களில் மிகவும் பிரபலம் அடைந்தவராக இருந்தார். கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்கள் மட்டும் மாலை போட்டுச் செல்வது போல, பெண்கள் மாலை போட்டுக்கொண்டு ஆதிபராசக்தி கோவிலுக்கு வரும் வழிமுறையை அவர் கொண்டு வந்ததால், பல கிராமங்களில் இருந்தும் பெண்கள் கூட்டமாக அவரது கோவிலுக்கு வந்தனர்.
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மாலை காலமானார். இதனால் மேல்மருவத்தூர் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். உடல்நலக் குறைவால் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார்.
அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி".தமிழ்நாட்டில் உள்ள கட்சி தலைவர்களும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பங்காரு அடிகளாரின் சேவைகளை போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பக்தர்கள் இரங்கல் தெரிவிக்க வரும் நிலையில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அவர் உயிருடன் இருக்கும்போது 24 மணி நேரமும் கோவிலில் அன்னதானம் வழங்கி மகிழ்ச்சி அடைவார் பங்காரு அடிகளார்.
இதனில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வருபவர் பட்டினியாக போக கூடாது என அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பங்காரு அடிகளார் மறைவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, உதயநிதி, ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், வேல்முருகன், அமித்ஷா, அண்ணாமலை, நட்டா உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலம் கல்வி நிறுவனங்களை தொடங்கி ஏழை, எளியோருக்கு இலவச கல்வியை வழக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.