24 special

அடுத்த சம்பவம்! மோடியின் போன் கால்.. அதிரடி காட்டிய ஈரான் ஆர்மூஸ் ஜலசந்தியைப் பிளந்து கொண்டு வரும் இந்தியக் கப்பல்கள்

PMMODI,MASOUDPEZESHKIAN
PMMODI,MASOUDPEZESHKIAN

கடந்த மாதம் 28ஆம் தேதி ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலானது, மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் ஒரு பெரும் போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த மோதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இதன் தாக்கம் உலக நாடுகள் முழுவதிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஈரான் ஆர்மூஸ் நீரிணையை மூடியதால், வளைகுடா நாடுகளிலிருந்து ஆசிய நாடுகளுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இத்தகைய பதற்றமான போர்ச் சூழலுக்கு மத்தியில், ஆர்மூஸ் ஜலசந்தியில் சிக்கித் தவித்த இந்தியக் கப்பல்கள் ஒவ்வொன்றாகப் பாதுகாப்பாக வெளியேறி வருவது இந்தியாவிற்கு ஒரு நிம்மதி தரும் செய்தியாக அமைந்துள்ளது. அந்த வகையில், பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகிய இரண்டு பிரம்மாண்ட சமையல் எரிவாயு சுமந்து வரும் கப்பல்கள், ஆர்மூஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து தற்போது இந்தியாவை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்துள்ளன. இதில் பைன் கேஸ் கப்பலானது ஓமன் கடல் பகுதியைத் தாண்டி, அரபிக் கடலில் மணிக்கு 12 நாட்டிக்கல் மைல் வேகத்தில் விரைந்து கொண்டிருக்கிறது. இந்த இரு கப்பல்களும் வரும் மார்ச் 28ஆம் தேதிக்குள் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஈரான் அதிகாரிகளின் முறையான அனுமதியைப் பெற்று, அந்நாட்டின் லார்க் மற்றும் கெஷம் தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள பாதுகாப்பான கடல்வழிப் பாதையைப் பயன்படுத்தியே இந்த இந்தியக் கப்பல்கள் வெளியேறியுள்ளன. போர்ச் சூழலில் தாக்குதல்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தைக் காட்டும் தானியங்கி அடையாளக் கருவி (AIS) மூலம் "இந்தியக் கப்பல் மற்றும் இந்திய ஊழியர்கள்" என்ற செய்தியைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. இந்த இரண்டு கப்பல்களும் இணைந்து சுமார் 92,612 டன் எடையுள்ள சமையல் எரிவாயுவை சுமந்து வருகின்றன; இது இந்தியாவின் ஒட்டுமொத்த ஒரு நாள் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கிய காலத்திலிருந்து சுமார் 22 இந்தியக் கப்பல்கள் இந்தப் பதற்றமான பகுதியில் சிக்கியிருந்தன. இந்த இக்கட்டான நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஈரான் அதிபருடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்தே, இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான வழித்தடம் கிடைத்து, இந்திய மாலுமிகள் மற்றும் சரக்குகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.