
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் மிகக்கடுமையான போர் பதற்றங்களுக்கு இடையே, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய கடற்படை எடுத்துள்ள இந்த "ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா" (Operation Urja Suraksha) நடவடிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மூண்டுள்ள மோதல் போக்கு, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக, இப்பகுதி வழியாகச் செல்லும் எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஈரான் இலக்கு வைத்து வருவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் உருவானது. இதன் நேரடி விளைவாக அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டையும், விலை ஏற்றத்தையும் சந்தித்து வருகின்றன. அங்கே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், இத்தகைய இக்கட்டான சூழலிலும் இந்திய மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய இந்திய அரசு மிகுந்த துணிச்சலுடன் இந்த அதிரடித் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்தியக் கடற்படை தனது அதிநவீன போர்க்கப்பல்களை அரபிக்கடல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகாமையில் உள்ள சர்வதேச கடல் எல்லைகளில் நிலைநிறுத்தியுள்ளது. வான்வழித் தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் கருவிகள் மற்றும் நவீன ரேடார் வசதிகள் கொண்ட ஐந்துக்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு சுமந்து வரும் கப்பல்களுக்கு "பாதுகாப்பு அரணாக" (Escort) செயல்பட்டு வருகின்றன.
ஏதேனும் ஒரு கப்பல் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், நொடிப் பொழுதில் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியக் கடற்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்த அதிரடி பாதுகாப்பு வளையத்தினால், போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் கடற்பகுதியிலும் இந்தியாவிற்கு வரும் சரக்குக் கப்பல்கள் எவ்விதத் தடையுமின்றி கரை சேருகின்றன. உலக நாடுகள் திகைக்கும் வகையில் இந்தியா மேற்கொண்டுள்ள இந்த பாதுகாப்பு நடவடிக்கை, இந்தியாவின் ராணுவ வலிமையை மட்டுமல்லாது, தனது நாட்டின் எரிசக்தித் தேவையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளமாட்டோம் என்ற உறுதியான செய்தியை உலகிற்குச் சொல்லியுள்ளது. "யாராவது தொட்டுப் பார்க்க முடியுமா?" என்ற ரீதியில் இந்தியக் கடற்படை அமைத்துள்ள இந்த இரும்புத் திரை பாதுகாப்பு, சர்வதேச சந்தையில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் உயர்த்தியுள்ளது.
