பெரும் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு குறைந்தது 5 ஆயிரம் வழங்க அரசிற்கு மனம் இல்லையா அல்லது பணம் இல்லையா என்று கேள்வி எழுப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக சும்மா இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு :-'தண்ணீர் தண்ணீர் என்று தவித்து இருந்த சென்னைக்கு போதும் போதும் என்ற அளவிற்கு கொட்டித் தீர்த்தது மழை. குடிநீர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற குதூகலம் நிலைக்க விடாது அதிகம் பெய்த மழையினாலும், மாநில அரசின் திறமையினாலும், குடிநீருக்கும் மட்டுமல்ல, புகழுக்கும் வந்து சேர்ந்தது ஆபத்து.
முழங்கால் சேற்றிலே மூழ்கிக் கிடந்தது சென்னை. முதல்வரின் தொகுதியிலும் கூட அதே நிலைதான். நான் படகிலே சென்றதைப் பரிகாசம் செய்தவர்கள் தான் இன்று நூறு படகுகளுடன் தயாராக இருக்கிறோம் என்று அறிவிப்பு செய்கிறார்கள். மழைநீரை முறையாக வெளியேற்றி இருந்தால் சாலைகளில் ஏன் படகுகளில் பயணப்படுகிறோம்.
கோடிகளை விழுங்கிய மழைநீர் வடிகால் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப் பணங்களின் போக்கிடமும் தெரியவில்லை... மழை நீருக்கும் அதன் போக்கு இடம் புரியவில்லை வீடுகளுக்குள்ளேயே சேற்று நீர், சமைக்க வழியில்லை, படுத்துறங்க இடமில்லை. எப்படிப் பணிக்கு செல்வார்கள் மக்கள்? வருமானமும் பாதிக்கப்பட்டு, மக்கள் படும் அவதியை சென்னையின் பல பகுதிகளில் நான் நேரில் கண்டு நெஞ்சம் வருந்தினேன்.
உண்ண உணவும், உடுத்த உடையும், படுக்க இடமும், தேவைக்குப் பணமும், இன்றி பரிதவித்து நிற்கும் மக்கள் சென்னை மக்கள். இம்மக்கள் அரசு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையில்தான், காப்பாற்றும் என்ற ஆதங்கத்தில்தான், சமாளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்று காலையில், மழை நீரில் ஊறிய, குடியிருப்பு வீடு உடைந்து, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 9 பேர் இறந்த கொடுமை நிகழ்ந்தது. இயற்கையின் சீற்றத்திற்கு ஒன்பது பேர் பலியாகி இன்னும் எட்டு நபர்கள் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். அவர்களுக்கு ஆதரவும் இரங்கலும் தெரிவித்தால் மட்டும் போதுமா?
மாநில அரசு காயம்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்கியதாகச் செய்திகள் வந்தன . ஓரளவு ஆறுதல் தந்தன. சென்னையிலும் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். செயல்பட வேண்டிய அரசு காத்திருக்கின்றனர்.
காலத்தினால் செய்த உதவி... பேரிடர் கால உதவிதானே ஞாலத்தை விடப் பெரியது. அதைக் காலத்தே செய்யவேண்டிய பொறுப்பும் அவசரமும் மாநில அரசுக்கு இருக்கிறது. மக்களின் இன்னல்களை மாநில அரசுக்குப் பலமுறை எடுத்துரைத்து மழை வெள்ள நிவாரணமாக ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நம்முடைய கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை.
ஆகவே மக்கள் படும் துன்பங்களைக் குறைப்பதற்காக, குடும்பத்திற்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை வலியுறுத்தி இன்று சென்னை மண்டலம் முழுவதும் பாஜக சார்பில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கொட்டும் மழையிலும் தொடர்ந்தது போராட்டம். மழையில் அவதிப்படும் மக்களுக்காக நடத்தப்பட்ட போராட்டம் மழையிலும் விடாமல் நீடித்தது, இதில் திரளான மக்கள் தன்னார்வத்துடன் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக அரசு காட்டிய பாய்ச்சலும் வீச்சும் ஆளும் கட்சியாக ஆனபிறகு முடங்கிப் போனது ஏனோ? எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்கள் மீது பொங்கிய பாசம் ஆளும் கட்சியாக ஆனபிறகு அமுங்கிப் போனது ஏனோ?
மக்களின் துன்பங்களைக் கண்ட பிறகும் ஆளும் கட்சிக்கு மனமில்லையா? அரசுக்குப் பணம் இல்லையா?போராட்டம் நடத்தி விட்டோம்; தீர்ந்தது எங்கள் பொறுப்பு ! என்று சும்மா இருக்கும் கட்சி அல்ல பாஜக. மக்களுக்கு நிவாரண தொகையைப் பெற்றுத் தரும்வரை எங்கள் போராட்டம் தொடரும்; இறுதி வரை களத்தில் நிற்கும். இது மக்களுக்கான போராட்டம்.
ஆளும் கட்சி இன்னும் தொடரும் மழையின் தீவிரத்தை உணர்ந்து மக்களுக்கு உடனடியாக இந்த நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் அதற்காக நம் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் அனைவருக்கும் விடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.