ஆப்கானிஸ்தான் : கடந்தவாரம் தலைநகர் காபூலில் நடந்த இந்திய தாலிபான் இருதரப்பு சந்திப்பில் பயங்கரவாதிகளுக்கெதிரான கடுமையான நடவடிக்கை தொடரும் என இந்தியாவிடம் தாலிபான் உயர்மட்டத்தலைமை உறுதியளித்துள்ளது. " எங்கள் மண்ணில் இருந்து மூன்றாம் நாடுகளுக்கெதிரான பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" என தாலிபான் அரசு கூறியுள்ளது.
தாலிபான்களின் அறிக்கையின்படி இந்தியாவின் மூத்த ராஜதந்திரியான ஜேபி சிங் தலைமையிலான குழு காபூலில் உள்ள தாலிபான் அரசாங்க அதிகாரிகளை சந்தித்தது. இந்த சந்திப்பில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தகி, பாதுகாப்புத்துறை அமைச்சர் முல்லா ;யாகூப் மற்றும் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பிற்கு முன்னர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்ட ஆசிய குடியரசுகளின் பிராந்திய பாதுகாப்பு உச்சிமாநாடு துஷான்பெவில் நடந்தது. அதில் அஜித் தோவல் பேசுகையில் " பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிட ஆப்கானிஸ்தான் தனது திறமையை மேம்படுத்த வேண்டும்" என கூறியிருந்தார்.
மேலும் தலிபான் உயர்மட்ட அதிகாரிகளின் சந்திப்பின்போது பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் ஈ தொய்பா மற்றும் ஜெய்ஷ் ஈ முகம்மது போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்தியாவுக்கெதிரான பயங்கரவாதத்தை ஆப்கான் மண்ணில் இருந்து பயன்படுத்தக்கூடாது என டெல்லி தலைமை அறிவுறுத்தியது. அதை தொடர்ந்து ஆப்கான் மண்ணில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் செயல்பட அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர்களுக்கெதிரான கடும் நடவடிக்கை தொடரும் எனவும் தாலிபான் உயர்மட்ட தலைமை அறிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஜூன் 2 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் " வெளிவிவாகாரங்களுக்கான அமைச்சகத்தின் இணைச்செயலர் தலைமையில் நமது மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஒரு குழு சென்றுள்ளது. இந்த குழு இந்திய திட்டங்கள் செயல்படும் இடங்கள் மற்றும் சர்வதேச குழுக்களை நேரில் சந்திக்கும்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனாலும் இந்த காபூல் விஜயம் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஆப்கானிடம் இருந்து அதற்கான உறுதியை பெறவும் என்றே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.