24 special

பெரியார் திடல் பெருமாள் திடலாகும்... இந்து மதம் மீது ஈவ்டீசிங்... திருமா- வெற்றிமாறனை வெளுத்து வாங்கிய அதிமுக பிரமுகர்!

Thirumavalan, maruthu alaguraj
Thirumavalan, maruthu alaguraj

பொன்னியின் செல்வன் படம் வெளியாகிய நிலையில் ராஜராஜ சோழன் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன்,"திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர்" என பேசியிருந்தார்.


இந்த பேச்சுக்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. அதன்பிறகு நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அளித்த பேட்டியில், முன்காலத்தில் சைவம், வைணவ சமயங்கள் மட்டுமே இருந்தது.

வெள்ளைக்காரன்தான் இந்து மதம் என்ற பெயரை கொடுத்தான் எனக்கூறினார். இதனைத்தொடர்ந்து திருமாவளவன் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரை சைவ மற்றும் வைணவ சமய அறநிலையத்துறை என்று வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இவர்களுக்கு கடும் கண்டங்கள் கிளம்பின.இந்நிலையில் அதிமுக கழக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், ‘’பெரியார் திடலும் பெருமாள் திடலாகும் ...

இந்து மதத்து நம்பிக்கைகளை கேள்வி கேட்பதாலும், கேலி பேசுவதாலும் ஏதோ தங்களுக்கு சமூகத்தின் மத்தியில் ஒரு அதிமேதாவித்தனம்  கிடைப்பதாகவும், மேலும் இந்து மதத்தின் மீதான விமர்சன தாக்குதல்களை இந்தியாவில் வாழும் மதச் சிறுபான்மை இன மக்கள் ஆதரிப்பதாகவும்,சில அடி முட்டாள்கள் கற்பனை செய்து கொண்டு வரம்பு மீறி இந்து மதத்தை விமர்சனம் செய்கிறார்கள். பிற மதங்கள் குறித்து முகம் சுழிக்கும் வகையில் விமர்சனங்கள் செய்தால் அபயம் தேடி அநேக நாடுகளில் தஞ்சம் கேட்க வேண்டியிருக்கும். 

ஆனால், இந்து மதத்தை இழிவு செய்தாலோ அவர்களுக்கு பகுத்தறிவுவாதி என்றும்  சமூக ஆர்வலர் என்றும் அடையாளங்களுடனான விளம்பர வெளிச்சங்கள் இந்நாட்டில் இனாமாகவே அவர்களுக்கு கிடைக்கும். இதுவே சாத்வீக மதமாகிய இந்து மதம் பலரது ஈவ் டீசிங்குகளை சந்திப்பதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால், இந்த நிலை நிச்சயம் மாறத் தான் போகிறது. 

மசூதிகளின் ஒர் வெள்ளிக்கிழமையும், தேவாலயங்களின் ஒர் ஞாயிறு பிரார்த்தனையும், இஸ்லாமிய -கிறிஸ்தவர் வாக்குகள் யாருக்கு என்பதை தீர்மானிப்பது போல ஐயனார் கோவிலிலும்,  அம்மன் கோவிலிலும், பெருமாள் சிவாலயங்களிலும் இந்துக்கள் ஒன்று கூடி தேர்தல் காலங்களில் தங்களது ஓட்டுக்களை யாருக்கு செலுத்துதல் நல்லது என கூடி முடிவெடுக்கும் காலம் ஒன்று சத்தியமாக விரைவில் உருவாக்கத் தான் போகிறது.

இதனை தி.மு.க. விரும்புகிறதோ, இல்லையோ,  திருமாவளவன் வெற்றிமாறன் போன்றோர் உருவாக்காமல் விட மாட்டார்கள்.அந்த நிலை வரும் போது ஒருவேளை  பெரியார் திடல் கூட பெருமாள்  திடலாகக் கூட பெயர் மாறிப் போகலாம். எனவே தொடர்ந்து அவசியமற்ற வகையில்  சீண்டலுக்கு உள்ளாகும் இந்து சமுதாய மக்கள் இனி ஒரு விதி செய்ய வேண்டிய அவசியமும், அவசரமும் தமிழகத்தில் உருவாகிவிட்டது என்றால் அதனை மறுக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.