தமிழகம் : இந்தியாவில் காலனி ஆதிக்கம் ஆரம்பிக்கும்போதே மதமாற்றங்களும் ஆரம்பித்துவிட்டன. டச்சுக்காரர்கள் கடலோர மாவட்டங்களில் முதலில் ஊடுருவி தங்களது நம்பிக்கைகளை இந்திய மக்களுக்கு போதிக்க ஆரம்பித்தனர். அப்படி ஒரு காலகட்டத்தில் கத்தோலிக்க மதத்தை தழுவியவர் இந்த தேவசகாயம்பிள்ளை.
திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்ட நட்டாலம் (ஆரல்வாய்மொழி) கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர் நீலகண்டன்பிள்ளை. 18ம் நூற்றாண்டில் பிறந்த இவர் திருவிதாங்கூர் மன்னரான மார்த்தாண்ட வர்மாவின் அரசவையில் அதிகாரியாக இருந்தார். அப்போது டச்சு கடற்படை தளபதியான யூஸ்டேசியாஸ் டி லினாய் என்பவரின் அறிமுகம் நீலகண்டபிள்ளைக்கு கிடைத்தது.
டச்சு தளபதி தனது கத்தோலிக்க கிறித்தவ போதனையை நீலகண்டபிள்ளைக்கு போதித்தார். அதைத்தொடர்ந்து நீலகண்டன்பிள்ளை கிறித்தவ மதத்தை தழுவி தனது பெயரை தேவசகாயம்பிள்ளை என மாற்றிக்கொண்டதாக நம்பப்படுகிறது. அதையடுத்து கத்தோலிக்க போதனைகளை அவர் மக்களிடையே பரப்ப திருவிதாங்கூர் அரசால் கொல்லப்பட்டதாக ஒரு கதை கன்னியாகுமரி மாவட்டத்தில் உலவிவருகிறது.
ஒரு தரப்பினர் டச்சுக்காரர்களுடன் சேர்ந்து தேசத்ரோகத்தில் ஈடுபட்டதால் தூக்கிட்டு கொல்லப்பட்டார் என கூறிவருகின்றனர். மேலும் மதமாற்றத்தில் ஈடுபட்டதால் கொல்லப்பட்டார் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என கூறுகின்றனர். இந்நிலையில் கோட்டார் மறைமாவட்டம் தமிழ்நாடு ஆயர்கள் பேரவை மற்றும் இந்திய கத்தோலிக்க அமைப்பு சார்பில் ஒரு வேண்டுகோள் விடப்பட்டது.
2004ல் தேவசகாயம்பிள்ளை பெயர் பட்டமளிக்கும் செயல்முறைபட்டியலில் வாடிகனுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் புனிதர் பட்டமளிப்பு ஆராதனையில் ஆசிர்வதிக்கப்பட்ட தேவசகாயம்பிள்ளையை போப் புனிதராக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கிறித்தவமத நம்பிக்கைப்படி புனிதர் பட்டம் பெறும் முதல் நபர் இந்த நீலகண்டன்பிள்ளையாவார். இந்தியாவில் உள்ள கத்தோலிக்க நம்பிக்கையாளர்கள் போப்பின் அறிவிப்பையடுத்து தொடர் பிரார்தனைகளுடன் வாழ்த்துக்களை பரிமாறிவருகின்றனர்.