மத்தியபிரதேசம் : மத்தியபிரதேச காடுகளில் அபூர்வ விலங்குகளை வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது. மாநில அரசு கண்காணிப்பு நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொண்டாலும் ஒருசில சமூக விரோதிகள் வனத்துறையினர் கண்ணில் மண்ணைத்தூவி எப்படியோ காட்டிற்குள் சென்று வெட்ட்டயாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குணா மாவட்டம் ஆரோன் பகுதியில் உள்ள பார்க்ஹெடா கிராமத்தின் அருகே உள்ள ஷாரோக் வனப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடுபவர்கள் நுழைந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சனிக்கிழமை காலை 2.45 மணியளவில் போலீசார் மூன்று குழுக்களாக வனப்பகுதிக்குள் நுழைந்தனர்.
அப்போது குறிப்பிட்ட வனப்பகுதியில் வேட்டையாடப்பட்ட கரும்புலிகள் மயில்களுடன் ஏழுபேர் கொண்ட வேட்டைக்காரர்கள் கும்பல் போலீசார் கண்ணில் பட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சரணடையுமாறு எச்சரிக்கை செய்ய அவர்கள் தப்பியோடினர். துரிதமாக செயல்பட்ட போலீசார் மூன்றுபேரை மடக்கிப்பிடித்தது.
தப்பிய நால்வர் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்தனர். இந்த சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் போலீஸ் வாகனத்தை ஒட்டிய ட்ரைவருக்கும் குண்டடி பட்டது. அதைத்தொடர்ந்து போலீசாரும் திருப்பி சுட ஆரம்பித்தனர். இதில் ஒரு வேட்டைக்காரன் கொல்லப்பட்டான்.
காவல்துறை தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட தப்பியோடியவர்களை பிடிக்கும்பணி துரிதப்படுத்தப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஜாதவ் , கான்ஸ்டபிள்கள் சந்த்ராம் மீனா, நீரஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வேட்டை கும்பலில் பெடோரியா கிராமத்தை சேர்ந்த நவ்சத் என்பவனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
போலீசார் நடத்திய கடும் தேடுதலையடுத்து பஜ்ரங்கர்க் காவல் சரகத்திற்குட்பட்ட ஒரு மலையில் பதுங்கியிருந்த ஷாஷத் கான் என்பவன் அன்று மாலையே போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். மீதமுள்ளவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு ஒருகோடி ரூபாய் நிவாரணம் அளித்து முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகான் உத்தரவிட்டுள்ளார்.