நாடளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 18 நாட்களே உளளன, ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் அதிமுககூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக அதிமுங்க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்த சூழ்நிலையில் பொது மேடையில் கண்கலங்கி கண்ணீர் விட்டதால் வேட்பாளரும் கண்கலங்கினார். கீழே உள்ள தொண்டர்களும் கண்ணீர் விட்டனர்.
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் நாடளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் அருகில் உள்ள வாணாபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
இந்த கூட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முதலில் பேசிய கள்ளக்குறிச்சி பாராளுமன்ற வேட்பாளர் இரா.குமரகுரு தேமுதிக குறித்தும் கேப்டன் விஜயகாந்த் குறித்தும் கண்கலங்கியபடி பேசினார். "கேப்டன் இறந்துவிட்டார், கேப்டனுக்காக உயிரை விடும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அந்தத் தொண்டர்களை நான் காப்பாற்றுவேன் என்று சூளுரைத்து வந்திருக்கிறார் அண்ணியார் பிரேமலதா." என உருக்கமாகப் பேசினார் குமரகுரு.
குமரகுரு மேடையில் கண்கலங்கியபடி பேச உடனே மேடையில் இருந்த பிரேமலதா விஜயகாந்த் கண்கலங்கினார். பிரேமலதா கண்ணீர் விட்டதைப் பார்த்து தேமுதிக தொண்டர்களும் கண் கலங்கினார்கள். தொடர்ந்து மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளர் குறித்தும் ரிஷிவந்தியம் சட்டமன்றம் குறித்தும் உருக்கமாக கண்ணீர் விட்டு பேசினார். காரணம், 2011ல் விஜயகாந்த், அதிமுக உடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு ரிஷிவந்தியம் எம்எல்ஏ ஆனார். அப்போது உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவாக இருந்தார் குமரகுரு. ரிஷிவந்தியம் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை விஜயகாந்த் செய்திருந்தார். பழைய நினைவுகளை கண்டு கண்ணீர் விட்ட பிரேமலதா கீழே அமர்ந்த தேமுதிக, அதிமுக தொண்டர்களும் நாங்கள் இருக்கிறோம் என்று குரல் எழுப்பி ஆதரவை கொடுத்தனர்.
விஜகாந்தும், குமரகுருவும் ஒரே காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் திமுக சார்பாக மலையரசனும், பாஜக கூட்டணியில் பாமக சார்பாக தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். கள்ளக்குறிச்சியை பொறுத்தவரைக்கும் திமுக, அதிமுக, பாமக இடையே போட்டி தொடங்கியுள்ளது. இதனால் களமே பரபரப்பாக தொடங்கியுள்ளது. மக்கள் யாருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.