பாஜகவினர் தங்களை அடையாளபடுத்தும் விதமாக கைகளில் காவி நிற கயறு கட்டுவது வழக்கம் இந்த சூழலில் இனி வரும் காலங்களில் பாஜகவினர் கூட்டம் நடைபெறும் காலங்களில் தலையில் தொப்பி அணிய திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கு முன்னோட்டமாக பிரதமர் மோடி குஜராத் சுற்று பயணம் மற்றும் பாஜக கட்சியின் ஆண்டுவிழா ஆகியவற்றில் பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் குஜராத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கும் வகையில் அகமதாபாத்தில் பிரதமர் மோடி அண்மையில் ஊர்வலம் நடத்தினார். அதில் பிரதமர் மோடி தலைப்பாகைக்கு பதிலாக காவி நிறத் தொப்பி அணிந்திருந்தார். இதையடுத்து குஜராத்தில் பிரச்சாரம் செய்யும் பாஜகவினர் காவி நிறத் தொப்பி அணிவது என்ற யோசனை அக்கட்சிக்கு உருவாகி விட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் பாஜக தலைவர்கள் முதல், எம்.பி., எம்எல்ஏ மற்றும் தொண்டர்கள் வரை அனைவரும் காவி நிறத் தொப்பி அணிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரே வடிவில், சிறப்பு வகை காவித்தொப்பி தயாராகி வருகிறது. கட்சியின் சின்னமாக தாமரை முத்திரையுடன் கூடிய இந்தத் தொப்பி இனிபாஜகவினரின் அடையாளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்கட்டமாக இதை பாஜக எம்.பி.க்கள் அணிய உள்ளனர். இதற்காக கட்சித் தலைமை அவர்களுக்கு 5 தொப்பிகள் உள்ளிட்ட சில பொருட்களுடன் ஒரு பைஅளிக்க உள்ளது. பிறகு படிப்படியாக கட்சி நிர்வாகிகளும் இதனை அணியவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவினர் கட்சி கொடி ஏற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காவி நிற தொப்பி அணிந்தது குறிப்பிடத்தக்கது.