
பெரம்பலூர் மாவட்டத்தில் செங்குணம், நாரணமங்கலம் உள்ளிட்ட 31 கிராமங்களில், கனிமவளங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம், தொடர்பான டெண்டர் நேற்று கலெக்ட்டர் அலுவலகத்தில் கோரப்பட்டது.மலையை குடைந்து எடுக்கும் கல்குவாரி ஏலம் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவித்த ஏலத்தை எடுக்க அரசியல் கட்சியில் தொடர்புடைய நிர்வாகிகள் ஏலத்தை எடுக்க முனைப்பு காட்டினார்கள்.
மறைமுக ஏலம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு பலரும் வந்திருந்தனர்.இந்த மொத்த ஏலத்தையும் ஒரு குரூப் எடுக்க விரும்பியது. தங்களுக்கு எதிராக ஏலம் எடுக்க யாரேனும் வந்தால் அவர்களை தாக்கவும் அடியாட்களை கையோடு கூட்டி வந்திருந்தனர். இந்த நிலையில், இந்த டெண்டரில் பங்கேற்க, பாஜக பிரமுகரும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செல்வனும் வந்திருந்தார். கலைச்செல்வன் மற்றும் முருகேசன் என்பவரும், விண்ணப்பத்தை பெட்டியில் போடுவதற்காக வந்தபோது, அங்கிருந்த சிலர் அவர்களை வழிமறித்து விண்ணப்பத்தை போடவேண்டாம் என்று சொன்னதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் அதை கேட்காமல் உள்ளே சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து முகத்தில் துண்டு அணிந்து மறைத்து கொண்டு அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு முன்னதாக அங்கு விண்ணப்பத்தை செலுத்தியது போக்குவரத்துக்கு துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் என கூறப்படும் மகேந்திரன் என்பவரின் தலைமையிலான கும்பலே அங்கு களேபரம் ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தடுக்க வந்த கனிமவளத்துறை அதிகாரியும், காவல்துறை அதிகாரிகளும் தாக்குதலுக்கு ஆளாகினர்.
அங்கு செய்திகள் சேகரிக்க சென்ற நிருபர்களையும் தாக்கி மொபைல் போன்களை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. கலெக்ட்டர் அலுவலகத்தில் தாக்குதல் நடைபெற்றதால் அலுவலகத்தில் இருந்த மொத்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டது. அனைத்து டாக்குமெண்டும் களைத்து போடப்பட்டது. நிலைமை கைமீறியதை அடுத்து மாவட்ட காவல்துறை விரைந்து வந்து அனைவரும் வெளியேற்றினர். பின்னர் மீண்டும் கலைச்செல்வன் மற்றும் அவரது தரப்பினரை அந்த கும்பல் அடித்து தாக்கியதால் பதற்றம் மேலும் அதிகரித்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் மொத்தமும் திட்டமிட்டு தான் நடத்தப்பட்டதாக கலைச்செல்வன் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்தரப்பு அவர்கள் தான் முதலில் மகேந்திரனை தள்ளிவிட்டதாக கூறி வன்முறையை கையில் எடுத்ததாக கூறினர். தொடர்ந்து ஆட்சியர் கற்பகம், தேதி குறிப்பிடாமல் இந்த ஏலத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.
கோடிக்கணக்கில் பணம் புரளும் கனிம பிசினஸ் விவகாரம், பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தையே சூறையாடியுள்ளது பொது மக்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையின் மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட ரகளை தொடர்பாக, நடத்திய விசாரணையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன் என்பவர் தலைமையிலான, 10க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 148, பொதுசொத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. இதற்கு முழு பொறு அமைச்சர் சிவசங்கர் தூண்டுதலின் காரணமாகவே அங்கு போராட்டம் நடந்ததற்கு முக்கிய காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.