“திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சியை விட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒழுக்கமானது என்று எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்”.கா ஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சங்கர மடத்தில் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் 11 ஆவது இசை திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விருது வழங்கிய நகைச்சுவை நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான எஸ்.வி.சேகர் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், டிவிட்டரில் அண்ணாமலைக்கு எதிராக நான் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் தினசரி பொதுவாகவே சில நகைச்சுவையான பதிவுகளை டிவிட்டரில் பதிவிடுவேன்.
அது நகைச்சுவைக்காக மட்டுமே பதிவிட்டேன். பாஜகவில் இருக்கும் நாம் எதிர்கட்சிகளோடு போரிட வேண்டும். அதை விட்டுவிட்டு நமக்குள்ளயே சண்டை போட்டு கொள்ளக்கூடாது.
“இந்தியாவின் தலைவராக மட்டுமில்லாமல் உலகத்தின் தலை சிறந்த தலைவராகவும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அவருடைய வழியில் நான் பாஜக கட்சிக்குள் பயணிக்கிறேன். பாஜகவுக்கு எதிராக நான் எந்த செயலிலும் ஈடபடவில்லை. அதேபோல் பாஜக தலைவர்களிடம் கவுன்சிலர் பதிவி கொடுங்கள், எம்.எல்.ஏ பதவி கொடுங்கள் என்று நான் கேட்கமாட்டேன். பிரச்சாரத்திற்காக மட்டுமே பாஜக கட்சிக்குள் வந்தேன் என்றார்”.
மேலும், “தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவது பொதுமக்களுக்கு முக்கியமான மற்றும் அவசியமான ஒன்று. இன்று அனைவரும் குறிப்பிடுகிறார்கள் ரெட் கிராஸ் சேவை தான் உலகத்திலேயே சிறந்தது என்று. ஆனால் ரெட் கிராஸ் சேவைக்கு இணையான சேவையை இந்தியாவில் கொடுப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டும் தான்”.
இந்தியாவில் புயல், சுனாமி, இயற்கை பேரிடர்கள் என எது நேர்ந்தாலும் முதல் ஆளாக வருவது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மட்டுமே. ஆர்.எஸ்.எஸ் என்பது ஒழுக்கத்தை கற்றுகொடுக்கும் அமைப்பே தவிர, அரசியலமைப்பு கிடையாது. அதை பார்த்து அரசியல் கட்சிகள் பயப்பிடுகிறார்கள். ஏன் பயப்படுகிறார்கள் என்றால் ஆர்.எஸ்.எஸ் ஒழுக்கத்தை கற்றுத்தருகிறது.
“தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணியின் போது கம்பு, அமைப்பு கொடியை எடுத்து வரக்கூடாது என்று தமிழக காவல் துறையினர் கட்டுபாடுகளை விதித்திருந்தனர். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியின் பேரணியில் எல்லாம் எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒழுக்கமானது. மேலும் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்வது என்பது முடியாத காரியம் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்”.