24 special

மடக்கி பிடித்த காவல்துறை கதறும் கம்யூனிஸ்ட்கள்...!

Rn ravi,mk stalin
Rn ravi,mk stalin

கடந்த வாரம் விடுதலை சிறுத்தைகளை சிறப்பாக கவனித்த காவல்துறை இந்த வாரம் கம்யூனிஸ்ட் கட்சியினரை சிறப்பாக கவனித்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான நேற்று மதியம் சாலை மார்க்கமாக கடலூர் வழியாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கி செல்வதற்காக வருகை புரிந்தார். ஆளுநர் வருகையை முன்னிட்டு சாலை நெடுகிலும் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தது.


மேலும் ஆளுநர் அவ்வப்போது ஆளும் திமுக கூட்டணி அரசை விமர்சித்தும், தனது கருத்துக்களை முன்வைத்தும் பேசி வருகிறார். மேலும் அரசியல் ரீதியாக சித்தாந்தங்களை பேசி வருவதும் ஆளும்  திமுக கூட்டணி அரசுக்கு தலைவலி ஏற்படுத்தி வருவதாக திமுகவின் தலைவர்களும், கூட்டணி கட்சியினரும் அவ்வப்போது ஆளுநருக்கு எதிராக போராடுவதும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஆளுநருக்கு எதிரான போராட்டங்களையும் அதிகளவில் முன்னெடுத்து வருகின்றனர் இடதுசாரிகள். இது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் திமுக அரசின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் புகாராக தெரிவித்தது இடதுசாரிகளை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது.

இந்த நிலையில், சிதம்பரம் வரும் ஆளுநருக்கு கம்யூனிஸ்டுகள் கட்சி தரப்பில் கறுப்புக்கொடி காட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த கறுப்புக்கொடி போராட்டத்தை பெரிய அளவில் நடத்த கம்யூனிஸ்டுகள் திட்டமிட்டனர். ஆளுநர் கடலூர் நகருக்குள் வரும்போதே சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் துரை தலைமையில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேகர், மாவட்ட துணை செயலாளர் குளோப், வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக ஆளுநர் வருகையின்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சட்ட விரோதமாக குழந்தை திருமணம் செய்வதை ஆளுநர் நியாயப்படுத்தி பேசுவதாகக் கூறி அவர்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆளுநரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 8 பெண்கள் உள்ளிட்ட 26 பேரை ஏஎஸ்பி ரகுபதி தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். மேலும் ஆளுநர் செல்லும் வழி நெடுகிலும் வேறு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்கள் கறுப்புக்கொடி ஏற்றவிடாமல் பார்த்துக்கொண்டது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முக்கிய நபர்களையும் காவல்துறை கண்கணிப்பில் வைத்திருந்தது. இது மட்டுமல்லாமல் ஆளுநர் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறை பலத்த பாதுகாப்பை ஏற்பாடு செய்திருந்தது.

இதனை தொடர்ந்து, நேற்று மதியம் கடலூரில் இருந்து சாலை மார்க்கமாக வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர் மதியம் சுமார் 4 மணியளவில் சீர்காழிக்கு புறப்பட்டுச் சென்றனார். ஆளுநர் வருகையையொட்டி சிதம்பரம் வண்டிகேட் பகுதி, நகரின் முக்கிய பகுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை பகுதி ஆகிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இப்படி ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருந்து கொண்டு ஆளுநருக்கு கறுப்புக்கொடி கூட காட்ட முடியவில்லை என கம்யூனிஸ்டுகள் அங்கிருந்தபடியே புலம்பி சென்றனர். மேலும் கடந்த வாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கொடி ஏற்ற விடாமல் காவல்துறை வெளுத்ததும், இந்த வாரம் கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட விடாமல் காவல்துறை வெளுத்ததும் திமுக கூட்டணி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.