கேரளா : ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் ஏ.ஆர்.ராஜு. இவரது மனைவி மினி. இருவருக்கும் ஒரு மகன் ஒரு மகள் என அந்த குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தது. ஆனால் திடீரென நிகழ்ந்த ஒரு சம்பவம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது.
ராஜு 2005 காலகட்டத்தில் குவைத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது 2005 மே 18 அன்று ராஜுவுக்கு அதிர்ச்சிகரமான தகவல் வந்துசேர்ந்தது. அவரது மகனான ராகுல் (7) காணாமல் போய்விட்டதாக வந்த தகவலை அடுத்து ராஜு உடனடியாக கேரளாவுக்கு திரும்பினார். மகனை பல இடங்களில் தேடினர். வழக்கு போலிஸிடமிருந்து சிபிஐக்கு கைமாறியது. ஆனால் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
காணாமல் போன ராகுலுக்கு வீட்டு லேண்ட் லைன் எண் தெரியுமென்பதால் தம்பதிகள் அந்த போனை சுற்றியே வலம்வந்துகொண்டிருந்தனர். அப்போது ஆந்திரா அருகே ரயில்வே இருப்புப்பாதையில் ஒரு சடலம் கிடந்ததாக தெரிய வந்ததையடுத்து ராகுலா என பரிசோதித்தனர். அதிலும் தோல்வியே. பின்னர் சிறுமியை கற்பழித்த வழக்கில் கைதான கிருஷ்ணபிள்ளை என்ற நபர் ராகுலை கொலைசெய்திருக்கலாம் என கூறப்பட்டது.
பின்னர் அவனை விசாரித்ததில் ஆலப்புழா நகராட்சிக்குட்பட்ட ஒரு சதுப்புநிலத்தில் ராகுலை புதைத்திருப்பதாக கூறினான். அங்கு சல்லடை போட்டு தேடியும் தடயங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் மினி ராஜு தம்பதிக்கு ஷிவானி என்ற பெண்குழந்தை பிறந்தது. மேலும் ராஜுவின் வீட்டருகே இருந்த 20 பேரிடம் பாலிகிராப் சோதனை மேற்கொள்ளப்பட்டும் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.
அதையடுத்து வழக்கை இழுத்துமூட அனுமதிகோரி நீதிமன்றத்தை சிபிஐ நாடியது. 2009ல் சிபிஐயால் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. பின்னர் 2014ல் வழக்கு மர்மவழக்காக முடித்துவைக்கப்பட்டது. இதற்கிடையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜு கேரளா திரும்பினார். கூட்டுறவு நிறுவனத்தில் பகுதிநேர பணியில் மினி வேலைபார்த்து வந்துள்ளார். அவரது சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கொச்சிக்கு ஒரு பணிக்காக இண்டெர்வியூ செல்வதாக கூறிச்சென்ற ராஜு பின்னர் வேலை கிடைக்கவில்லை என கூறியுள்ளார். அதே சோகத்திலும் மகனை இதுவரை காணாத சோகத்திலும் இருந்த ராஜு தற்கொலை செய்துகொண்டார். மகனின் நினைப்பாகவே இருந்த அவர் பூமியில் மகனை தேடி கிடைக்காததால் விண்ணுலகம் தேடிப்போயுள்ளார்" என ராஜுவின் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறிவருகின்றனர்.