24 special

திமுகவின் இரண்டரை ஆண்டு சாதனையை சுட்டிக்காட்டிய -சீமான்

mk stalin, seeman
mk stalin, seeman

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான், திமுகவைக் சரமாரியாக விமர்சித்தார். மேலும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.நாம் தமிழர் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கட்டமைப்பை வலுப்படுத்த கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட சீமான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கினார். இந்தக் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் சீமான், "நீட்டை கொண்டு வந்ததே திமுகவும் காங்கிரசும் தான்.


ஆனால், இப்போது நாடகமாடுகிறார்கள். திமுக ஒப்புதல் இல்லாமலே நீட்டை கொண்டு வந்திருக்க முடியுமா, இதற்கு முதலில் உதயநிதி பதில் சொல்லட்டும். செங்கல்லைத் தூக்குவது... முட்டையைத் தூக்குவதை எல்லாம் மக்களை அவர் ஏமாற்றவே செய்து வருகிறார்.இதற்கிடையில் தமிழ்நாட்டில் வேலை இன்றி பலர் இருக்கின்றனர். நமது நாட்டில் அனைத்து வேலை செய்வோருக்கும் தேர்வுகள் இருக்கிறது. அந்த தகுதியைப் பெற்றால் மட்டுமே அவர்களுக்கு அந்த வேலை கிடைக்கும். ஆனால், ஆட்சியாளர்களுக்கு எதாவது தேர்வு இருக்கிறதா. எந்தவொரு தகுதியும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்ற சூழல் இருந்தால் எப்படிச் சரியாக இருக்கும்.

இங்கே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் நியாயம் கேட்டுப் போராடுகிறார்கள். ஆனால் அவர்களுக்குச் செவி சாய்க்கக் கூட தமிழக அரசுக்கு நேரமில்லை.அவர்களுக்கு முன் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் அரசிடம் நிதி இல்லை என்கிறார். அவர்கள் வீட்டில் நிதி கொட்டி கிடப்பதால் தான் அரசுக்கு நிதி இல்லை என்கிறார்கள். அரசுக்கு 9 லட்சம் கோடி கடன் உள்ளது. எந்தத் திட்டத்திற்கு இவ்வளவு கடன் வாங்கினார்கள். மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை உறுதி செய்துவிட்டு இவ்வளவு கடன் இருக்கிறது என்று சொன்னால் கூட ஏற்கலாம். ஆனால் நிலைமை இப்படியா இருக்கிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன் அவர்களுக்கு நீங்கள் வாக்குறுதி கொடுத்ததால் தான் போராட்டத்தை கையில் எடுத்தனர். ஆட்சிக்கு வந்த பின் நீங்கள் அவர்களை கண்டு கொள்ளவில்லை என்று சாடினார்.தமிழகத்தில் மின் கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தி இருக்கிறார்கள். இதனால் வறுமையில் இருக்கும் ஏழ்மை மக்களுக்கும் கூட ஆயிரக் கணக்கில் மின் கட்டணம் வருகிறது. இதை எல்லாம் எப்படி ஏற்க முடியும். இது குறித்து நான் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறேன். ஆனால் ஒருவரிடமும் பதில் இல்லை" என்றார்.

தொடர்ந்து தேர்தல் குறித்துப் பேசிய அவர், "மோடி மோடி எனப் பூச்சாண்டி காட்டி திமுக ஆட்சி வந்துள்ளது. மோடி இல்லை என்றால் திமுகவால் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. இதனால் திமுக தான் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், நீட்டை ஒழிக்க இவர்கள் எதையும் செய்யவில்லை. போராட்டம் கூட நடத்தவில்லை. இப்போது லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது தேர்தல் நாடகம் அவ்வளவுதான்.

மேலும், உரிமை தொகை திட்டத்தில் பாதி பெண்களுக்கு மட்டுமே இப்போது பணம் கிடைப்பதாகத் தெரிவித்த அவர், தேர்தல் முடிந்தும் விடும் என்றும் திராவிடம் என்பது ஒரு ஏமாற்று வேலை என்றும் அவர் சாடினார். தேமுதிக தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை உயர்த்தி வைத்திருந்தது. ஆனால் கூட்டணியில் இடம்பெற்றதால் வாக்கு சதவீதம் வெகுவாக சரிந்து விட்டது. நாங்கள் தனித்துப் போட்டியிடுவது தான் மக்களுக்கு பிடித்திருக்கிறது. அதனால் தான் எங்கள் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது என்று சீமான் கூறினார்.