24 special

கவுதமிக்கு நியாயம் கிடைக்க பாஜக துணை நிற்கும்- அண்ணாமலை பேட்டி!

annamalai, gowthami
annamalai, gowthami

நடிகை கவுதமி பாரதிய ஜனதாவில் இருந்து நேற்று முன்தினம்  விலகினார். கனத்த இதயத்துடன் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:என்னுடைய 17 வயதிலிருந்து நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நானும் என் மகளும் பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம். ஆனால் பாஜக நிர்வாகியான சி.அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டார். மேலும் அழகப்பன் சட்டத்திலிருந்து தப்பிக்கவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 40 நாட்களாக அவர் தலைமறைவாக இருப்பதற்கும் சில மூத்த பாஜக உறுப்பினர்கள் உதவி செய்திருப்பதை அறிந்து நொறுங்கிப் போனேன்.


25 ஆண்டுகாலம் கட்சிக்குத் தொடர்ந்து விசுவாசமாக இருந்தபோதும், எனக்கு முற்றிலுமாக ஆதரவு இல்லை. எனவே, கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாஜகவில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கு பாஜக தரப்பில் இருந்து அழகப்பன் நீக்கப்பட்டார். அதன் பிறகு பாஜக எம்எல்ஏ., வானதி சீனிவான் கவுதமிக்கு ஆதரவு அளிப்பதாகவும், அவர் கொடுத்த புகார் மீது ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.அவரை தொடர்ந்து  கவுதமி விலகல் குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்தது; எனது சக உறுப்பினரான கவுதமி பாஜகவில் இருந்து வெளியேறியது வருத்தமாக உள்ளது.

அவர் நல்ல பண்பாளர். சுயநலமில்லாத கடின உழைப்பாளியாக பா.ஜனதாவில் பணியாற்றினார். அவரது எதிர்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள். என்று ஆதரவை தெரிவித்தார்.இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது கவுதமி விலகல் குறித்து கேட்டதற்கு பதிலளித்த அண்ணாமலை: “தமிழ்நாட்டுக்கு பாஜகவின் உயர்நிலை குழு அக்டோபர் 27-ஆம் தேதி வருகிறது. தமிழ்நாட்டின் உண்மை நிலையை பாஜக குழுவிடம் எடுத்துரைக்க உள்ளோம். கவுதமி என்னிடம் இன்று காலை கூட பேசினார்.

நடிகை கவுதமி கொடுத்த புகார் ஆமை வேகத்தில் தான் போய் கொண்டு இருக்கிறது. கவுதமி புகார் அளித்துள்ள நபருக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, அப்படி இருக்கும் நிலையில் கட்சியால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.  கவுதமி கட்சியில் தொடர்வது அவரது தனிப்பட்ட உரிமை. கட்சியில் இருந்து விலகி இருந்தாலும், பாஜக அவருக்கு தேவையான உதவிகளை செய்யும். கவுதமிக்கு நியாயம் கிடைக்க பாஜக துணை நிற்கும். அவருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்” எனக் கூறினார்.