24 special

செந்தில்பாலாஜி அரசியல் வாழ்க்கையை மாற்றப்போகும்அந்த முக்கிய நபர்...! இனி கிளைமாக்ஸ்தான்...!

Senthil balaji, nithiskumar
Senthil balaji, nithiskumar

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு எதிரானது என்றும் சட்டவிரோத காவல் வைத்திருப்பதாகவும் கூறி அவரது மனைவி முறையிட்டார்.  இந்த ஆட்கொணர்வு மனுவிற்கு எதிராக அமலாக்கத் துறையினர் மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.   இரு நீதிபதிகள் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது .


செந்தில் பாலாஜியின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபல்,  அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தும் உரிமை இல்லை என்றும் இதற்கான எந்த சட்டமும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படவில்லை என்ற   வாதத்தையும் முன்வைத்தார்  . அமலாக்கத்துறையினரின் முக்கிய வாதம் என்னவென்றால் தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்கிறார் இந்த காலகட்டத்தில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடியாத சூழ் நிலையில் இந்தக் காலத்தை சிறையில் இருந்த நாட்களாக கருதக்கூடாது என்றும் பொதுவாக ஒருவரை கைது செய்தால் அவரை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரணை செய்த பின்னரே நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தனது கருத்தை அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் மேத்தா வாதிட்டார். இரு சார்பினரின் வழக்கு நீதிமன்றத்தில் காரசாரமாக நடந்து வந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பரவலாக எழுந்தது.

நீதிபதி நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வாதத்தை ஏற்று தீர்ப்பளித்த நீதிபதி நிஷா பானு செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோத செயல் என்றும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தனது தீர்ப்பை வெளியிட்டார். மேலும் நீதிபதி பரத சக்கரவர்த்தி நீதிமன்ற காவல் சட்ட விரோத செயல் அல்ல என்றும் மேலும் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தும் தனது தீர்ப்பை வெளியிட்டார். இருவரும் தனது கருத்தை தனித்தனியே மாறுபட்ட கோணத்தில்    தீர்ப்பளித்தனர், இப்படி உச்சகட்ட பரப்பரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வு பற்றி தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

நீதிபதிகளின் அதிரடியான தீர்ப்பு செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறையினர் இடையே பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியை அமர்வுக்கு கொண்டு வருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில்   ஆதாரங்கள் அழிக்க வாய்ப்பிருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றம் இன்னும் ஒரு வாரத்தில் மூன்றாவது நீதிபதியை பரிசீலித்து விசாரணையை நடத்த வேண்டும் என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு  உத்தரவிட்டுள்ளது . மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பில் தான் செந்தில் பாலாஜியின் தலையெழுத்தை அடங்கியுள்ளது என அனைவரும் கூறி வந்தனர்.

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவின் அடுத்த கட்டமாக யார் அந்த மூன்றாவது நீதிபதி என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது  சி வி கார்த்திகேயனை தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மூன்றாவது நீதிபதியாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். எனவே நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வழங்கும் தீர்ப்பு தான் இறுதி கட்ட தீர்ப்பாக அமையும் என்ற செய்தியும் கிடைத்துள்ளது. மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் கூறப்போகும் தீர்ப்பு செந்தில் பாலாஜியின் வழக்கை திசை திருப்புவது மட்டுமின்றி செந்தில்பாலாஜியின் அரசியல் வாழ்க்கையையே மாற்றப்போகிறது!