24 special

வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட செந்தில்பாலாஜி...! வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Annamalai, senthil balaji
Annamalai, senthil balaji

ஒரு புறாவுக்கு  போரா-ன்னு” நம்ப இம்சை அரசன் சொல்லற மாதிரி... அண்ணாமலைகிட்ட வாட்ச்சுக்கு பில் கேட்ட நம்ப செந்தில் பாலாஜி சிக்கி தவிச்சிக்கிட்டு இருக்காரு.


தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னோட கையில் ரஃபேல் விமான பாகங்களால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக வாட்ச் ஒன்றினை அணிந்துள்ளார். இந்த வாட்ச் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என்றும், பிரபல நிறுவனம் இதனை பிரத்யேகமாக அண்ணாமலைக்கு தயாரித்து கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. உடனே ‘அய்யய்யோ... அண்ணாமலை கட்டியிருக்குற  வாட்ச் ரொம்ப காஸ்ட்லியாமே?, ‘இதுக்கெல்லாம் காசு எங்கிருந்து வந்திருக்கும்?’ அப்படியெல்லாம் அவதூறுகள் வலம் வர ஆரம்பித்தது.

அப்பாடா... அண்ணாமலை மேல குத்தம் சொல்ல சூப்பர் மேட்டர் கிடைச்சிடுச்சின்னு திமுக தரப்பு தயாராக... முதல் ஆளாக முந்திக்கொண்டார் செந்தில் பாலாஜி. அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் எவ்வளவு விலை உயர்ந்தது தெரியுமா?... உண்மையான விலையுடன் கூடிய பில்லை அவர் வெளியிட தயாரா? என்றெல்லாம் பிரஸ் மீட் போற இடமெல்லாம் சவால் விட ஆரம்பித்தார்.
இதனால் செய்தியாளர்கள் அண்ணாமலையை வட்டமிட ஆரம்பித்தனர். அவரை பார்க்கும் இடமெல்லாம் ரபேல் வாட்ச் பற்றி கேள்விகளையே முன்வைத்தனர். ஊடகங்கள் முன்வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் அண்ணாமலை தெளிவாக விளக்கமளித்து வந்தார். மேலும் இந்த வாட்ச் மேட்டருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்த அண்ணாமலை,  வாட்ச் வாங்கியதற்கான பில்லை ஏப்ரல் மாதம் வெளியிடுவதாக அறிவித்தார்.

ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்ட ஒற்றைக் கேள்வி இப்படி திமுகவிற்கு பெரும் தலைவலியாக மாறும் என யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் தனது வாட்ச் பில்லோடு சேர்த்து, திமுக முக்கிய புள்ளிகளின் ஊழல் மற்றும் சொத்து பட்டியலை வெளியிடும் தேதியையும் போட்டுடைத்தார் அண்ணாமலை.
சொன்னது போலவே  தனது வாட்ச் பில்லை வெளியிட்ட அண்ணாமலை, அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 14ம் தேதி அன்று  திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரின் சொத்து பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட்டார். அன்றிலிருந்தே திமுகவின் செல்வாக்கு மக்களிடம் இறக்குமுகத்தில் சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அதிமுகவில் இருந்ததிலிருந்தே இருந்தே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய செந்தில் பாலாஜியின் பெயர், இதில் ஏன் இல்லை என்ற கேள்வி எழுந்தது. திமுகவில் தனிப்பெரும் செல்வாக்கோடு வலம் வரும் செந்தில் பாலாஜியை மொத்தமாக தட்டித்தூக்க திட்டமிட்ட அண்ணாமலை,  இந்தாள் மற்றும் முன்னாள் ஊழல் குற்றச்சாட்டுகளை தோண்டி துருவ ஆரம்பித்தார். இதன் விளைவாகவே கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 40 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இரண்டு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இப்போது கள்ளச்சாராய குடித்து 22 நபர்கள் உயிரிழந்த விவகாரத்திலும் மது விலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜி மீது மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து நீக்க முதல்வருக்கு உத்தரவிடவும் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மற்றொருபுறம் கள்ளச்சாராய மரணத்திற்கு எதிராக களத்தில் குதித்த அதிமுக, மாபெரும் கண்டன பேரணியை நடத்தியது. அண்ணாமலைக்கு அடுத்தபடியாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பிடிஆரின் சின்ன ஆடியோ விவகாரத்திற்கே அவரை வேறு துறைக்கு மாற்றிய திமுக. செந்தில் பாலாஜி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அவரை தங்களது சொத்தாக கருதி பொத்தி, பொத்தி பாதுகாப்பது ஏன்? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அனைத்து பக்கத்தில் இருந்தும் செந்தில் பாலாஜி மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில், திமுகவின் அடுத்த மூவ் என்ன என பொறுத்திருந்து பார்க்கலாம்...