தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணத்தை ராமேஸ்வரத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு தொடங்கினார். இந்த நடை பயணத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் முக்கிய பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னணியில் பிரதமர் மோடி இராமநாதபுரத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் அதன் காரணமாகத்தான் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பயணத்தை மேற்கொள்கிறார் என்ற பேச்சுக்கள் ஏற்கனவே எழுந்தது... அனாலும் இன்னமும் பாஜக சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் மற்ற கட்சியினர் கூட பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை துவங்கிய இந்த நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் ஒரு நாள் தங்கி தேர்தல் குறித்து சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசியதாகவும், தேர்தல் பற்றிய முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும் சில தகவல்கள் கசிந்தன. மேலும் பாஜகவினருக்கு தென் மாவட்டத்தில் ஸ்பெஷல் டாஸ்க் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து பிரதம மந்திரி மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட போவதாக கிட்டத்தட்ட வாய்மொழி தகவலாக உறுதியானதும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது திமுக நிர்வாகிகளிடம் ராமநாதபுரத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது அங்கேயும் நாம் தான் வெற்றி பெற வேண்டும் என்று அலர்ட் செய்து வருவதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ராமநாதபுரத்தில் இருக்கும் மக்களை கவர்வதற்காக மீனவ சங்கங்களை அழைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் திமுகவினர் என்ன அரசியல் நடவடிக்கை எடுத்தாலும் அண்ணாமலை மக்களுக்கு பாஜகவின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை பற்றிய புரிதல் ஏற்பட்டுவிட்டது இனி பாஜக ஜெயிப்பதை யாராலும் மாற்ற முடியாது என கூறி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான முயற்சிதான் இந்த நடை பயணம் என்று செல்லும் இடங்களிலெல்லாம் கூறி வருகிறார்.
எனவே ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவது உறுதி என நம்பி திமுகவினர் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் சேகர் பாபு பிரதமர் மோடி போட்டியிடுவதைப் பற்றி விமர்சித்துள்ளார். சென்னையில் உள்ள தங்க சாலையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 130 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். மேலும் இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்டோர் பங்கு பெற்ற நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதம மந்திரி மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவது குறித்து பேசினார்..
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எத்தனை நடை பயணங்களை மேற்கொண்டாலும் ராமநாதபுரம் , புதுச்சேரி உட்பட்ட அனைத்து இடத்திலும் திமுக தான் வெற்றி பெறும் என்றும் ராமநாதபுரத்தில் பாரத பிரதமர் மோடி போட்டியிட்டாலும் சரி அதைவிட பெரிய ஜாம்பவான் போட்டியிட்டாலும் திமுகவிற்கு தான் வெற்றி என்று கூறியுள்ளார். மேலும் திமுக என்பது தங்கம் என்றும் பாஜக என்பது தகரம் என்றும் கூறிவிட்டு திமுகவுடன் பாஜகவை ஒப்பிடாதீர்கள் என்று விமர்சித்தது தற்போது பாஜகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரத பிரதமர் மோடி தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக ராமநாதபுரத்தில் போட்டியிடுவது உறுதி என்று தெரிந்ததால் தான் திமுகவினர் இப்படியெல்லாம் பேசி வருகின்றனர் ஒரு கை பார்த்துவிடலாம் என பாஜகவினர் எல்லாவற்றிக்கும் தயாராக இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.