புதுதில்லி : கடந்த ஜூன் 24 அன்று VLSRM, டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படையால் ஒடிசா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சந்திப்பூரில் குறுகிய தூர ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்தியாவின் ஏவுகணை பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சிகள் இந்த குறுகிய தூர ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதிக்க வழி வகுத்துள்ளது.
இந்த குறுகிய தூர ஏவுகணை கடலில் இருந்து கூட ஏவப்படும் ஒரு அமைப்பாகும். மேலும் கடற்பகுதி இலக்குகள் மற்றும் நெருங்கிய தூரத்தில் வரும் வான்வழி அச்சுறுத்தல்களை அழிக்கவல்லது. இதுதவிர ப்ரித்வி-II என அழைக்கப்படும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல் ஜூன் 15 அன்று மேற்கொள்ளபப்ட்டிருந்தது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "நிரூபிக்கப்பட்ட இந்த ப்ரித்வி II மிக துல்லியமாக இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது" என தெரிவித்துள்ளது. மேலும் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் விகே. சதுர்வேதி கூறுகையில் " தற்போது மிக சிக்கலான தாக்குதல் மற்றும் தற்காப்பு ஏவுகணைகளை சொந்தமாக தயாரிப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
நமது நாட்டின் ஏவுகணை தொழில்நுட்பம் எதிரிகளின் முக்கியமான இலக்குகளை வெகுதுல்லியமாக தாக்கும் திறனை கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 2020- ஏப்ரல் 2022 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளின் மூன்று பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பலவகையான ஏவுகணைகளும் அடங்கும். இதில் சிறப்பம்சம் என்னவெனில் அவை பலகட்டங்களாக உள்நாட்டிலேயே உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 5 பில்லியன் டாலர் அளவிலான பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியை இலக்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் பிரம்மோஸ் ஏவுகணையின் மூன்று பேட்டரிகளை இறக்குமதி செய்ய பிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் 2700கோடி மதிப்பில் ஒப்பந்தம்போட்டுள்ளது.