24 special

நவ நரசிம்ம சன்னதியை கொண்ட சிம்மகிரி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் பற்றிய மர்மம்...

narasimha temple
narasimha temple

விஷ்ணுவின் நான்காவது அவதாரமாக விளங்குகின்ற நரசிம்மர் அவதாரம் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் சிங்கத்தின் நகங்களையும் கொண்ட அவதாரமாகும். வைஷ்ணவர்கள் பலர் நரசிம்மரை தங்களது முதன்மை கடவுளாகவும் வழிபட்டு வருகின்றனர். ஏனென்றால் தனது பக்தர்களை தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாகவும் நரசிம்மர் கருதப்படுகிறார். அதாவது தன்னுடைய பரம பக்தனான பிரகலாதன் அசுரனாக பிறந்தாலும் இறைவனின் மீது அவன் கொண்ட சிறந்த பக்தி எப்பேர்ப்பட்ட தடை அவமானங்கள் வந்தாலும் கடவுள் மீது அவர் கொண்ட நம்பிக்கையை விடாத காரணத்தினால் அவனுக்காகவே நரசிம்மர் என்று அவதாரத்தை எடுத்த விஷ்ணு இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்தார். விஷ்ணுவின் நான்காவது அவதாரமாக நரசிம்மர் அவதாரம் கருதப்பட்டாலும் நரசிம்மருக்கும் பல வடிவங்கள் உள்ளது கிட்டத்தட்ட ஒன்பது வடிவங்களில் நரசிம்மரை வழிபட்டு வருகிறார்கள் மக்கள்! 


உக்கிர நரசிம்மர், குரோத நரசிம்மர், வீர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், கோப நரசிம்மர், யோக நரசிம்மர், அகோர நரசிம்மர், சுதர்சன நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் என ஒன்பது வடிவங்களை கொண்ட இந்த நரசிம்மர்களை நவ நரசிம்மர் என்று அழைப்பார்கள். இந்த நவநரசிம்மர்களின் வடிவமானது ஆந்திராவில் உள்ள அகோபிலம் என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை நவ நரசிம்மர்களை ஒன்றாக பார்க்க வேண்டும் என்றால் நாம் ஆந்திரா தான் செல்ல வேண்டுமா என்று தமிழக பக்தர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டிய தேவையில்லை ஏனென்றால் சென்னைக்கு அருகிலேயே நவ நரசிம்மர்களைக் கொண்ட நவகிரக சன்னதி சிம்மகிரி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. அதுவும் சென்னைக்கு அருகில் ஒரு மலைகளுக்கு நடுவில் இந்த கோவில் அமைந்துள்ளது என்று கூறினால் அனைவருக்கும் ஆச்சர்யமாக தான் இருக்கும், சென்னையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் - செய்யூர் வழித்தடத்தில் அமைந்துள்ள சித்திரவாடி என்ற மலைகள் நிறைந்த ஒரு சிறிய கிராமத்தில் சிம்மகிரி என்ற மலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். 

அதாவது ஆந்திர மாநிலத்தில் அகோபிலத்தில் நவநரசிம்மரும், சிங்கப்பெருமாள் கோவிலில் பாடலாத்ரி நரசிம்மரும் பழைய சீவரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரும் நரசிங்க பெருமாள் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் வேளையில் சென்னைக்கு அருகிலும் சிம்மகிரி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் தன்னை தேடி வரும் பக்தர்களின் கோரிக்கையை நாளை என்று தள்ளிப் போடாமல் அன்றே தீர்த்து வைத்து வருகிறார். இந்த பகுதியை அடைந்தவுடன் முதலில் 250 படிகளை கடந்து சென்றால் சிங்கமுக வடிவத்திலேயே நரசிம்மர் கோவில் அமைந்திருக்கும் அதன் நுழைவாயில் நரசிம்ம பெருமாள் வாய்க்குள் நாம் நுழைவது போன்ற வடிவமைக்கப்பட்டிருப்பது நம் மனதை கொள்ளை கொள்வதோடு நம்மை பக்தியில் ஆழ்த்தி விடும். அதோடு இந்த தளத்தில் ஸ்ரீ நரசிம்மர் லட்சுமி பிராட்டியை தன் மடிமீது அமர்த்தி அணைத்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

2007 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கோவில் மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது அதனால் ஆஞ்சநேயரின் அம்சமாக விளங்குகின்ற குரங்குகளும் இங்கு ஏராளமாக காணப்படுகிறது ஆனால் மற்ற மலைக்கோவில்களில் இருப்பது போன்று இங்குள்ள குரங்குகள் பக்தர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதில்லையாம்! மலையேற முடியாதவர்களுக்கும் வயதான பக்தர்களுக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை தரிசிக்க வசதியாக மலைக்கோவலின் அடிவாரத்திலும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு ஒரு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிம்ம நரசிம்மர் கோவில் குறித்த வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிலும் சிம்ம நரசிம்மர் கோவிலை நாம் காணலாம் அந்த வீடியோவை கண்டதுமே நாம் நிச்சயமாக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு பக்தர்கள் மனதிலும் தோன்றிவிடும் ஏனென்றால் அந்த கோவிலின் அமைப்பு அப்படி ஒரு அற்புதமான காட்சியாக உள்ளது.