24 special

ஆகஸ்ட் இறுதியில் அமெரிக்கா செல்லும் ஸ்டாலின்...... துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளாரா உதயநிதி... கசிந்த பல தகவல்கள்...

MKSTALIN, UDHAYANITHI
MKSTALIN, UDHAYANITHI

திமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து வருடா வருடம் வெளிநாட்டு பயணங்களின் மேற்கொண்டு தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதாகவும் அதன் மூலம் பல்லாயிரம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் செய்திகளில் பெருமிதமாக கூறி வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திற்காகவும் துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறை பயணத்தை மு க ஸ்டாலின் மேற்கொண்டார். மேலும் முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தின் மூலம் கிட்டத்தட்ட 2600 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம் இதன் மூலம் 9700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று திமுக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த வருடம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.


தமிழக முதல்வரின் இந்த அரசு முறை பயணமும் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் போது தமிழகத்திற்கு 3233 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார். ஆனால் இந்த இரண்டு வருடத்திலும் தமிழக முதல்வர் மேற்கொண்ட அரசு முறை பயணங்களில் இவ்வளவு முதலீடு பெறப்பட்டுள்ளது  இவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறதே தவிர அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன நடக்கிறது, ஈர்க்கப்பட்ட முதலீடுகள் வந்ததா? சொல்லப்பட்ட பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதா என்பது குறித்த பதில்கள் கிடைப்பதில்லை தொடர்ச்சியாக இது குறித்த கேள்விகள் மட்டுமே முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாத இறுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மீண்டும் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா பயணம் மேற்கொள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

அதுமட்டுமின்றி தமிழகத்தில் நிலவுகின்ற தொடர் சட்ட ஒழுங்கு சீர்கேடு, அவற்றால் மக்கள் மத்தியில் திமுகவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் அனைத்தையும் சரி கட்டுவதற்காக தற்பொழுது அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கைகளில் திமுக இயங்கியது அதாவது சமீபத்தில் கூட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் நீண்ட காலமாக தனது மகனை துணை முதலமைச்சர் ஆக அமர்த்தி விட வேண்டும் என்ற ஆசையும் மு க ஸ்டாலினுக்கு இதுவரை நிறைவேறாமலே உள்ளது. அந்த ஆசையை வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் துணை முதலமைச்சராக தனது மகனை பொறுப்பில் அமர்த்தி அழகு பார்த்து விடலாம் என அறிவாலய தலைமை முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே முதல்வர் மேற்கொள்ளும் அனைத்து கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை துணை முதல்வர் என்ற பொறுப்பு மட்டுமில்லாமல் துணை முதல்வர் செய்யும் அனைத்து செயல்களையும் அமைச்சர் உதயநிதி செய்து வருகிறார் அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிகள் பதவியேற்கும் பொழுது எங்கள் எதிர்காலம் எங்கள் வாரிசு என உதயநிதி ஸ்டாலினின் பெயரை கூறி பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டார்கள். அதனால் திமுகவில் தற்போது அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்கள் மு க ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதியை தலைவராக அமர்த்த தயாராகி விட்டார்கள் என்பது கண்கூடாக தெரிந்தது. ஆகவே முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்கா பயணம் செல்வதற்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என்றும் அந்த அமைச்சரவை மாற்றத்தில் துணை முதல்வராக உதயநிதி பொறுப்பில் அமர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.