தமிழக பாஜகவில் செயல்படாத நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் அனைவரையும் மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்க இருப்பதாக வெளியான தகவல் உறுதியாகியுள்ளது, இதில் விழுப்புரம், மதுரை இன்னும் பிற பகுதிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் உறுதியாக இருக்கும் எனவும்.
சென்னையில் காலியாக உள்ள மாவட்ட தலைவர் பதவி உட்பட தென் மாவட்டங்களில் முக்கியமான இடங்கள் அதாவது பாஜகவிற்கு செல்வாக்கு உள்ள இடங்கள் மற்றும் பாஜக வாக்கு வங்கியை அதிகரிக்க விரும்பும் இடங்களில் முக்கிய மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் கிளை நிர்வாகிகள் முதல் மாவட்ட தலைவர் மாற்றங்கள் வரை 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரங்கேற இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் விழுப்புரம் மாவட்ட தலைவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்ததாக ஆடியோ பதிவு வைரலானது அதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க படலாம் எனவும் கூறப்படுகிறது, இது போன்று உயர்மட்ட நிர்வாகிகளுக்கு செவி சாய்க்காமலும் கட்சியின் வளர்ச்சி பணியிலும் ஈடுபடாத நிர்வாகிகள் மாற்றம் இருக்கும் என உறுதியாக கமலாலயம் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.
இது குறித்து பாஜக தரப்பில் பரவலாக பேச படுவதாவது கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்ல இளைஞர் படை தயாராக உள்ளது. அவர்களில் பலருக்கும் தகுதியும், திறமையும் உள்ளது. அவர்களுக்கு புதிய நிர்வாகியாகும் வாய்ப்பு கிடைக்கலாம். பழையவர்களாக இருந்தாலும், தகுதியானவர்களை பா.ஜ., தலைமை புறக்கணிக்காது. நல்லவர்களை, வல்லவர்களை கண்டிப்பாக வரவேற்பர்.
அதனால், விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு வெளியாகும். உள்ளாட்சி தேர்தல் முடிந்த உடன் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும். மற்றபடி, இதில் யார் என்ன அழுத்தம் கொடுத்தாலும், அது எங்கும் எடுபடாது. புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல புது ரத்தம் பாய்ச்சப்படும் எனவும் அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.