இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பா.ரஞ்சித் தமிழக ஆளுநரை விமர்சனம் செய்தார் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித்,ஆளுநர் தன்னுடைய வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார், அவரின் போக்கு மிகவும் மோசமாக உள்ளது.
தொடர்ந்து ஏதாவது பேசி பொது சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். எந்த தகவலின் அடிப்படையில் ஆளுநர் இவ்வாறு பேசுகிறார் என்பது தெரியவில்லை, ஆளுநரின் பேச்சு தவறுதான் அதனை ஏற்க முடியாது என்று கூறினார்.
இந்த சூழலில் பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி பா. ரஞ்சித் பாணியிலேயே ஆளுநரை விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார் அதில்,
பா.ரஞ்சித் நீங்க கூட திரைப்பட இயக்குனர் வேலையை பார்க்காமல் அரசியல் செய்றீங்க என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்தியாவில் கருத்துச் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அது ஆளுநராக இருந்தாலும் சரி அல்லது திரைப்பட இயக்குனராக இருந்தாலும் சரி.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல், அவர் பேசவே கூடாது என்பது எத்தகைய ஜனநாயக உரிமை? இத்தகைய மனநிலையில் நீங்கள் எல்லாம் எப்படி தலித் விடுதலையை பற்றி பேசுகிறீர்கள்? பட்டியல் சமுதாய மக்களின் பஞ்சமி நிலம் மீட்கப்படாமல் இருப்பதை பற்றி என்றைக்காவது வாய் திறந்ததுண்டா?
கடந்த நிதி ஆண்டில் 16,442 கோடி மத்திய அரசாங்கம் ஒதுக்கியதில் 10,466 கோடி ரூபாய் பட்டியல் சமுதாய நிதியை செலவு செய்யாமல் துரோகம் செய்திருக்கும் திமுக அரசை எதிர்த்து என்றைக்காவது கேள்வி எழுப்பியதுண்டா?
100 நாட்களைக் கடந்தும் வேங்கவயல் நீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கண்டுபிடிக்காமல், சட்ட ஒழுங்கை பாதுகாக்காமல் பட்டியல் சமுதாயத்திற்கு அநீதி இழைத்து வரும் திமுக அரசை கண்டித்து வாய் திறந்ததுண்டா?
இது போன்ற மக்கள் பிரச்சனையில் கேள்வி எழுப்பாமல் ஆளுநருக்கு எதிராக திசைதிருப்பும் வேலையை தம்பி பா. ரஞ்சித் போன்றவர்கள் செய்வது வேதனை அளிக்கிறது.என தடா பெரியசாமி குறிப்பிட்டு இருக்கிறார்.தடா பெரியசாமி போட்ட எந்த பட்டியலுக்கும் இது வரை பா.ரஞ்சித் இன்று ஆளுநருக்கு எதிராக பேசியது போன்று வாய் திறக்காதது குறிப்பிடத்தக்கது.