புதுதில்லி : BRO என அழைக்கப்படும் எல்லை சாலை அமைப்பின் 63ஆவது எழுச்சி தினத்தை முன்னிட்டு அத கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் உரையாற்றினார். எல்லைகளை பாதுகாப்பவர்களுக்கு அதிகபட்ச முன்னுரிமை மற்றும் அதிகபட்ச வசதிகளை வழங்குவதே அரசின் முதல் நோக்கம் எம தெரிவித்தார்.
BRO 63ஆவது எழுச்சி தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் ராஜ்நாத்சிங் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது " சமீபகாலமாக வடக்கு பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மலைப்பகுதிகளில் அவர்களின் கட்டுமானத்துறையின் திறமையின் காரணமாக பல்வேறு இடங்களுக்கு மிக விரைவாக சென்றடைகிறார்கள்.
BRO தொடர்ந்து அவர்களுக்கு இணையாக பணியாற்றவேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திறனை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 2022-23 நிதியாண்டில் BRO வின் மூலதன பட்ஜெட் நாற்பது சதவிகிதம் அதிகரித்து 3500 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பு நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைப்பகுதிகளின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.
எல்லைப்பகுதிகளில் உள்ள மக்கள் எவ்வளவு அதிகாரம் பெறுகிறார்களோ அவ்வளவு அந்த பகுதிகளின் பாதுகாப்பு பற்றியும் அவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருப்பார்கள். குடிமக்கள் ஒரு நாட்டின் மிகப்பெரிய சக்தி. எனவே மாறிவரும் காலத்திற்கேற்ப நமது எல்லைப்பகுதிகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நாம் உறுதிபூணுவோம்.
BRO என்பது ஒரு கட்டுமான அமைப்பு மட்டுமல்ல.ஒற்றுமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றின் மிகப்பெரிய உதாரணம். ஒரு தேசத்தின் முன்னேற்றத்தில் சாலைகள் பாலங்கள் சுரங்கங்கள் ஆகியவை மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை நீங்களே வடிவமைக்கிறீர்கள். நீங்கள் தொலைதூரப்பகுதிகளில் மலைப்பாங்குகளில் வாழும் மக்களின் வாழ்வை மேம்படுத்தியுள்ளீர்கள்" என குறிப்பிட்டார். மேலும் BRO வுக்கான BRO ரிசோர்ஸ் மேனேஜ்மேண்ட் சிஸ்டம் மற்றும் BRO பட்ஜெட் மேனேஜ்மேண்ட் சிஸ்டம் ஆகிய இரு மென்பொருட்களை எல்லை சாலை அமைப்புக்கு அர்ப்பணித்தார்.