தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிச்சாங் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த வரலாறு காணாத மழைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் 6000 நிவாரண தொகையை அறிவித்திருந்தார்.
இந்த வருடம் தொடக்கத்தில் முதல் பயணமாக தமிழகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, திருச்சியில் சர்வதேச விமானத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நல திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அந்த விழாவின் இடையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அப்போது தமிழக எம்பிக்கள் 13ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு உள்ளதாக தகவல் வந்தன.
அதன்படி, இன்று த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் சந்தித்தனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, சி.பி.ஐ நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், சி.பி.எம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார், முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, கொங்கு நாடு மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகிய 8 பேர் சந்தித்தனர்.
வெள்ள பாதிப்புகளுக்கான மொத்தமாக ரூ.39,000 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் அவர்கள் நேரில் வலியுறுத்தினர். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.19,692 கோடி உடனே வழங்க வேண்டும் எனவும் எம்பிக்கள் குழு வலியுறுத்தியது. தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் நோக்கி நிவாரணம் வேண்டும் என்று கடிதம் மூலமும் நேரடியாகவும் வலியுறுத்தி வந்தனர். ஆனால், மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி இரண்டரை மடங்கு அதிகமாக கொடுத்ததாக பிரதமர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு 2014ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை நிதி கொடுத்தது குறித்து புள்ளி விவரத்தை எடுத்துரைத்தார்.
இந்தநிலையில் இன்று எம்பிக்கள் மத்திய அமைச்சரை சந்தித்தது நிவாரண தொகை கேட்கவும், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் முழுக்க முழுக்க அரசியல் காரணம் குறித்து இந்த சந்திப்பு இருக்கலாம் என்ற தகவல் கூறப்படுகிறது. முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து கேலோ இந்திய விளையாட்டு போட்டிக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றதாகவும் கூறினார். அதன் பிண்ணனியில் துணை முதலமைச்சர் பதவி ஏற்கவுள்ளதால் மோடியிடம் ஆரசிர்வாதம் வாங்க சென்றதாக சில தகவல் கசிந்தன.
மேலும், தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு தொடர்ந்து வருவதால் தனது குடும்பம் மீது எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டாம் பாஜகவை நாங்கள் விமர்சிக்க மாட்டோம் என்று கூறியதாகவும் அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. இன்றைய சந்திப்பு எதை நோக்கி என்பதை வரும் நாட்களில் உண்மை தகவல் வெளிவரக்கூடும் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.