எப்படி நடிகர் விஜய் சேதுபதி பெங்களூர் விமான நிலையத்தில் பயணி ஒருவரால் தாக்கப்பட்ட போது முதலில் உண்மை அறியாமல் தமிழக ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக கருத்து தெரிவித்ததோ அதே போன்று நேற்று செந்தில் பாலாஜி வழக்கிலும் தமிழக ஊடகங்கள் உண்மையை மாற்றி சொல்லியது அம்பலமாகி இருக்கிறது.
செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதி ஜெ.நிஷாபானு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து நேரடியாகவும், நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து காணொலி வாயிலாகவும் மாறுபட்ட தீர்ப்பை நேற்று பிறப்பித்தனர்.முதலில் தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் என்பதால், ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்கிறேன். எனவே, செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றார்.
ஆனால் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி தனது தீர்ப்பில், "அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் கிடையாது. எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்கிறேன்.அதேநேரம், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் ஆலோசனைப்படி, நேற்று முதல் 10 நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடரலாம். அதன்பிறகு அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்க வேண்டும். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தை, நீதிமன்றக் காவலாக கருதக்கூடாது என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்கிறேன்.
அவர் உடல் நலம் தேறிய பிறகு, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். அதை அமர்வு நீதிமன்றம் பரிசீலித்து, தக்க உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளதால், மூன்றாவது நீதிபதியை நியமிக்க, இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் இப்படி தீர்ப்பு கிடைத்த அடுத்த சில மணி நேரங்களில் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளதால், உச்ச நீதிமன்றமே சரியான முடிவை எடுக்க வேண்டும். ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜி செல்வாக்கு மிக்க நபர் என்பதால்,காலதாமதம் வழக்கை நீர்த்துப்போகச் செய்துவிடும். காலம் தாழ்த்த, தாழ்த்த, ஆதார அழிப்பும் நடந்து வருகிறது. எனவே, விரைந்து முடிவெடுக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் 3-வது நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வாரத்தில் நியமிக்க வேண்டும். மேலும், மெரிட் அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுகள் எதுவும், சென்னை உயர் நீதிமன்ற விசாரணையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் தற்போது நீதிமன்றக் காவலில்தான் உள்ளார்" என்று கூறி, விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
மேலும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க, தனியாக மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். இப்படி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்க துறை வைத்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக உச்ச நீதிமன்ற வழி காட்டுதல்கள் இருந்த நிலையில் பல தமிழக ஊடகங்கள் அது குறித்து தெளிவு படுத்தாமல் செந்தில் பாலாஜிக்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக கூறியது ஊடகங்கள் மக்களிடம் ஏதோ ஒரு தகவலை முன் வந்து திணிக்க பார்க்கிறது என்ற சந்தேகம் அதிகரித்து இருக்கிறது.
தற்போது செந்தில் பாலாஜி மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனுவில் மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கபட்டு இருப்பதும் அவர் நாளை மறுநாள் வழக்கு விசாரணயை மெரிட் அடிப்படையில் தொடங்குவார் என்ற தகவல் செந்தில் பாலாஜிக்கு அமலாக்க துறை வைத்த பெரிய ஜெக்காக பார்க்க படுகிறது.