பிஹார் : மது அருந்துவது என்பது மேல்தட்டு மக்களுக்கு நாகரீகமாகவும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு அடிக்சனாகவும் மாறியுள்ளதை நாம் கண்கூடாக காணலாம். மதுவை ஒழிப்போம் என்று குரல்கொடுக்கும் எந்த ஒரு அரசியல்வாதியும் ஆட்சிக்கு வந்தபின்னர் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிடுகின்றனர்.
மதுவின் மூலம் எப்படி லாபமடையலாம் என்றே கருதுகின்றனர். மதுபோதைக்கு அடிமையானவர்களால் சமூக குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இத்தகைய சூழலில் மதுவை நியாயவிலைக்கடைகளிலேயே விற்கும் அவலநிலை சில மாநிலங்களில் காணப்படுகிறது. இந்நிலையில் பிஹார் மாநிலம் சமஸ்திபூரிலிருந்து சஹர்சா செல்லும் பயணிகள் ரயில் ஒன்று ஒருமணிநேரம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.
சமஸ்திபூரிலிருந்து சஹர்சா நோக்கி பயணித்த பயணிகள் ரயில் ஹசன்பூரில் சிறிதுநேரம் ரயில் நின்றபோது இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. பயணிகள் ரயிலானது ஹசன்பூரில் நின்றபோது அசிஸ்டன்ட் லோக்கோ பைலட் கரண்வீர் யாதவ் திடீரென காணாமல் போனார். ரயில் கிளம்ப சிக்னல் கிடைத்தும் கிளம்பாததால் ஸ்டேஷன் மாஸ்டர் இதுகுறித்து விசாரணையை தொடங்கினார்.
அதேநேரத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர். இதனிடையே ஏ.எல்.பியை தேட ரயில்வே போலீசார் வரவழைக்கப்பட்டனர். ரயில்வே நிலையத்தின் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் கண்ணைக்கூட திறக்கமுடியாத நிலையில் இருந்த ட்ரைவரை போலீசார் கைதுசெய்தனர். மேலும் கரன்வீருக்கு ஸ்டேஷன் மாஸ்டர் மெமோ கொடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கோட்ட ரயில்வே மேலாளர் அலோக் அகர்வால் உத்தரவிட்டார். கிட்டத்தட்ட ஒருமணிநேரத்திற்கும் மேலாக போதைக்கு அடிமையான டிரைவரின் செயலால் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.