24 special

காலாடியிலேயே கிடக்கும் வில்லன் நடிகன்... வாழ்வு கொடுத்த வீரனுக்கு மரியாதை... கண்ணீர் ததும்ப மன்சூர் அலிகான்...

vijayakanth, mansoor alikhan
vijayakanth, mansoor alikhan

விஜயகாந்த் உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் அவரது காலடியிலேயே நடிகர் மன்சூர் அலிகான் அமர்ந்திருக்கிறார் . விஜயகாந்த் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி அறிந்தது முதல் விஜயகாந்த் உடலுக்கு அருகிலேயே தவமாய்க் கிடக்கிறார் மன்சூர் அலிகான்.நடிகர் விஜயகாந்த் சினிமாவில் ஏராளமான புதிய இயக்குநர்களையும், நடிகர்களையும்  அறிமுகப்படுத்தி வளர்த்து விட்டுள்ளார். இதேபோன்றுமன்சூர் அலிகானை பெரிய நடிகர் ஆக்கியதில் விஜயகாந்த்தின் பங்கு மிகபெரியது.  தனக்கு வாழ்வு கொடுத்தவர் என்பதால் விஜயகாந்த் மீது மன்சூர் அலிகானுக்கு எப்போதும் ஒரு பயம் கலந்த அன்பும், மரியாதைம் உண்டு என எப்போதும் கூறுவார்.விஜயகாந்த்தின் மரணச் செய்தி கேட்டு விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றார். விஜயகாந்த் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது முதல் அவரது உடல் அருகிலேயே இருந்தார்.விஜயகாந்த் வீட்டில் இருந்து கட்சி அலுவலகத்திற்கு, விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொதுமக்களுடன் சேர்ந்து கண் கலங்கியபடி நடந்தே சென்றார் மன்சூர் அலிகான். 


தேமுதிக அலுவலகத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல் உள்ள பெட்டியின் அருகிலேயே கொஞ்சமும் நகராமல் இருந்து வருகிறார் மன்சூர் அலிகான்.  திரையுலகில் எவரையும் விட தான் அதிகம் நேசிக்கும், மதிக்கும் கேப்டன் விஜயகாந்த்தின் இறப்பால் கலங்கிப் போயுள்ள மன்சூர் அலிகானின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன. அண்மையில் விஜயகாந்த், உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உருக்கமான அறிக்கையை வெளியிட்டிருந்தார் மன்சூர் அலிகான். அதில், "அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!! கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது, பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே! அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்? 

மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே! நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து. ஓடி. ஆடி... உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு. கருப்பு எம்.ஜி.ஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே! மக்களோடுதான் கூட்டணி என்றாய்! எங்கள் மாநகர காவலனே, பூந்தோட்ட காவல்காரனே. வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு  கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் இப்ராஹிம் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிக, ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா... 100வது படம் எந்த நாயகர்களுக்கும் ஓடியதில்லை தாங்களது 100வது படத்தில் முதல் வாய்ப்பளித்து வெற்றி திருமகளை மாலையிட வைத்த பிரபாகரனே... வாழிய வாழிய நூறாண்டு'!!

தாங்களிடம் அடிவாங்க காத்திருக்கும் தம்பி மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். தற்போது காற்றில் கலந்த விஜயகாந்துடன் கடைசி நிமிடம் வரை இருந்துவிட்டு செல்கிறேன் என்பது போன்று விஜயகாந்தின் காலடியிலேயே கிடக்கிறார் மன்சூர் அலிகான்...மன்சூர் அலிகான் மீது எவ்வளவு சர்ச்சைகள், வழக்குகள் என ஊடகங்களில் அவர் பேசு பொருளாக மாறினாலும் நன்றி மறவாத ஒரு நல்ல மனிதராவே அனைவராலும் தற்போது பார்க்கப்பட்டு வருகிறார்.