கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐந்து மாநிலங்களின் தேர்தலில் மூன்று மாநிலங்களில் வெற்றியை பிடித்து தன்னை எதிர்ப்பதற்காக கூட்டணி அமைத்த IND கூட்டணிக்கு பதிலடி கொடுத்தது. இதனை அடுத்து பாஜகவின் அடுத்த முக்கிய பணியாக அயோத்தியில் கட்டப்பட்டு வந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா பார்க்கப்பட்டது. அதனால் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் அதனை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பல வேலைகளில் ஈடுபட்டது, அதோடு பாஜக திட்டமிட்ட பாடியே ராமர் கோவில் உலக அளவில் பிரபலத்தை பெற்றது.
அதுமட்டுமின்றி அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்யும் பெரும் பாக்கியம் நாட்டு மக்களின் பிரதிநிதியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது, அதனால் 11 நாட்கள் விரதம் இருந்து ஆன்மீக பயணங்கள் மேற்கொண்டு அயோத்திக்கு சென்று ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் பாலராமரை பிரதிஷ்டை செய்தார் மற்றும் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதனை அமெரிக்கா வரையிலும் நேரடி ஒளிபரப்பு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது உலகம் முழுவதும் கவனத்தை பெற்றது.
இதனை அடுத்து கும்பாபிஷேக விழா முடிந்த அன்றைய தினமே பிரதமர் நரேந்திர மோடி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து இனி தேர்தலில் முழு கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் வேட்பாளர்கள் பட்டியல், அவர்களின் திறமை மற்றும் தகுதி குறித்த முழு பட்டியலும் என்னிடம் வரவேண்டும் என்றும் தொகுதிகளை திட்டமிட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளுங்கள் என்ற உத்தரவுகள் பறந்ததாக கூறப்பட்டது.
இதனை அடுத்து சென்னை கமலாலயத்தில் இதற்கான அதிரடி நடவடிக்கைகள் தற்போது தொடங்க ஆரம்பித்துள்ளது. அதன் முதல் பகுதியாக தேர்தல் அலுவலகத்தை திறக்க இருப்பதாக பாஜக தேசிய மாநில அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கமலாயத்தில் பாஜக சார்பில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கூட்டணி பேச்சு வார்த்தைகள் குறித்து கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்றும் அதற்கு முன்பாக ஏராள பணிகள் உள்ளது என்றும் அவற்றில் ஒரு பகுதியாக மாநில தேர்தல் பணி அலுவலகம் (இன்று) ஜனவரி 28ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
ஆனால் இந்த நடவடிக்கைக்கு முன்பாகவே பாஜக சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் அமைப்பாளர்கள் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மகளிர் மாநாடு, இளைஞர் மாநாடு, விவசாய மாநாடு ஆகியவற்றை தொடங்கி விட்டதாகவும் கூறினார்! மேலும் பூத் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டமும் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வருவதாகவும் கூறினார். இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கக்கூடிய 40 தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்டத்திலும் இது குறித்த வேலையை தொடங்குவதற்காக பாஜக தலைமை களவீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதோடு இந்த முறை குறைந்த பட்சம் 25 தொகுதிகளையாவது வெல்ல வேண்டும் என பாஜக தனது வீரர்களுக்கு குறிப்பாக அண்ணாமலை தனது கட்சியினருக்கு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.