தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை திமுக தலைமை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது என்ற விமர்சனங்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ ஒன்றை வெளியிட்டு திமுக கட்சிக்கு அதிர்ச்சியை கிளப்பினார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ வெளியானதை தொடர்ந்து அமைச்சரவை மாற்றப்பட்டதுடன் அவர் தொடர்ச்சியாக நடைபெற்ற திமுக நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கு பெறவில்லை, அதாவது பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் மற்றும் அவரது மருமகன் பற்றி தவறாக பேசியதாக ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பிய பின் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதுடன் நிதி துறை அமைச்சரிலிருந்து தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டார்.
இதனால்தான் கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இராமநாதபுரத்தில் மீனவ சங்க மாநாடு மற்றும் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நீட் போராட்டம் ஆகிய நிகழ்வுகளில் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளாமல் இருந்தது கட்சியில் முக்கிய லாபியில் இருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டாரா என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால் அந்த ஆடியோவில் இருந்த குரல் என்னுடைய குரல் இல்லை என்று பழனிவேல் தியாகராஜன் எத்தனை முறை எடுத்துரைத்தாலும் திமுக தலைமை ஏற்றுக் கொள்வதாக இல்லை இதனால் கட்சியில் பழனிவேல் தியாகராஜனுக்கு தர்ம சங்கடத்தை தான் ஏற்படுத்தியது மேலும் திமுக தலைமை திமுக சார்பாக நடைபெற்ற பொது நிகழ்ச்சிகளில் பழனிவேல் தியாகராஜனை கலந்துகொள்ள விருப்பம் காட்டவில்லை, குறிப்பாக மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூலக திறப்பு விழாவில் அனைத்து திமுக அமைச்சர்களும் சிறப்புரையாற்றியபோது பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் சிறப்புரையாற்றுவதற்கு அழைக்கப்படவில்லை.
அப்போது பழனிவேல் தியாகராஜன் மலேசியா சென்றார் என்ற தகவலும் கசிந்தன. இவ்வாறு பிடிஆர் திமுக தலைமையால் ஒதுக்கப்படுவதும் அவமானப்படுத்தப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாத பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்கள் திமுக தலைமை மீது ஏக கடுப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நீட் விவகாரத்தில் திமுக மக்கள் மத்தியில் உறுதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை அந்த விவகாரமும் அதனை தொடர்ந்து சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதன் காரணமாக திமுகவிற்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கட்சி பின்னடைவை கண்டுள்ளது. இப்படி திமுக பின்னடைவை சந்தித்து வருவது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும் என உணர்ந்த திமுக தலைமை மீண்டும் பி.டி.ஆரை சமாதானப்படுத்தி அழைத்துள்ளதாக சில செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் மீண்டும் மதுரையில் மக்களை சந்திக்கவேண்டும் என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் அறிவாலய தலைமை கேட்டுக்கொண்டதாக வேறு தெரிகிறது..
இதன் காரணமாக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற மதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களை வீடு, வீடாக சந்தித்து கடந்த 6 மாத காலத்துக்கான தன்னுடைய செயல்பாட்டு அறிக்கையை, வெளியிட்டு வருகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் முக்கிய மாநகராட்சியான மதுரையில் திமுக பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் பி டி ஆரை அழைத்து மீண்டும் களப்பணியை திமுக தலைமை செய்ய சொன்ன காரணத்தினால் பிடிஆர் அதனை செய்து வருவதாக அவரது ஆதரவாளர்களில் சிலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே ஆடியோ விவகாரம் காரணமாக அமைச்சரவையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டாலும் தற்பொழுது விபரீதத்தை உணர்ந்து பி டி ஆரிடம் அறிவாலயம் சரணடைந்து விட்டது என்ற விமர்சனங்கள் எழுகின்றன.