
தற்போது உலக அரசியலை புரட்டி போட்டுள்ளது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புதின் போட்ட ஒரு கையெழுத்து,இனி இந்தியாவும் ரஷ்யாவும் தான் உலகத்தை ஆளுவோம் என்ற செய்தியை ஒரு கையெழுத்தின் மூலம் உலகிற்கு சொல்லியுள்ளார் விளாமிடிர் புடின். உக்ரைன் போர்நடந்து வரும் நிலையில், ரஷ்யா–இந்தியா இடையே உருவாகியுள்ள புதிய இராணுவ ஒப்பந்தம், அமெரிக்கா, நேட்டோ மற்றும் சீனாவை கலக்கமடையச் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ரஷ்யாவின் ராணுவ தளங்கள், விமான தளங்கள் மற்றும் கடற்படை துறைமுகங்களை இந்திய இராணுவம் பயன்படுத்துவதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரஷ்ய இராணுவத்துக்கும் இந்திய ராணுவ தளங்களை பயன்படுத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனால், இது ஒரு சாதாரண இராணுவ ஒத்துழைப்பு அல்ல; இருநாட்டு நட்பின் புதிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஐரோப்பாவிற்கு அருகில் பறக்கும் இந்திய போர் விமானங்கள் எரிபொருள் அல்லது தொழில்நுட்ப சேவை தேவைப்பட்டால், இந்தியாவிற்கு திரும்பாமல் நேரடியாக ரஷ்ய விமான தளங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல், வடக்கு கடல் பகுதிகளில் ரோந்து செல்லும் இந்திய போர்க்கப்பல்கள், ரஷ்ய கடற்படை துறைமுகங்களில் நங்கூரமிட முடியும்.
உக்ரைன் போர் இன்னும் முடிவடையாத நிலையில், நேட்டோ நாடுகள் ரஷ்யாவை அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக முற்றுகையிட முயற்சித்து வருகின்றன. இந்த சூழலில், புதின் எடுத்துள்ள இந்த முடிவு, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய கூட்டணிக்கு நேரடியான அரசியல் சவாலாகக் கருதப்படுகிறது. ரஷ்யா, “இந்தியா என் நம்பகமான கூட்டாளி” என்ற தெளிவான செய்தியை உலகிற்கு அனுப்பியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுவரை, அமெரிக்கா இந்தியாவை ரஷ்யாவிலிருந்து மெதுவாக விலக்க முயன்று வந்தது அது அதற்காக வரிகளை வாரி இறைத்தது அமெரிக்க. ஆனால் இந்தியா அசராமல் தனக்கு தேவையான புதிய பாதையை தேர்ந்தெடுத்தது.
மேலும் ரஷ்யா இந்தியா ஒப்பந்தத்தின் தாக்கம் ராணுவ மட்டத்தில் மட்டும் இல்லாமல், புவிசார் அரசியலிலும் எதிரொலிக்கிறது. ஆர்க்டிக் பிராந்தியம் – எதிர்கால உலகின் எண்ணெய், எரிவாயு மற்றும் அரிய கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக கருதப்படும் இந்த இடத்தில், இதுவரை ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தற்போது, இந்தியாவுக்கும் அந்தப் பகுதிக்கு நேரடி அணுகல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம், வடக்கு கடல் பாதையை பயன்படுத்தி ஐரோப்பாவை அடைய இந்தியாவிற்கு புதிய வர்த்தக வாய்ப்புகளும் திறக்கப்படுகின்றன.
மேலும், இந்திய பெருங்கடலில் சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளை அதிகரித்தால், இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து அதை கட்டுப்படுத்த முடியும். இது ஒருபுறம் இருந்தால் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுடன் ஜெட் எஞ்சின் மற்றும் உயர் தொழில்நுட்ப ஒப்பந்தங்களை பேசிக் கொண்டிருக்கிறார், மறுபுறம் ரஷ்யாவுடன் இவ்வளவு ஆழமான இராணுவ ஒப்பந்தம் செய்வது, இந்தியாவின் “இராஜதந்திர கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது இந்தியா என உலக நாடுகள் பேச ஆரம்பித்து விட்டது. இந்தியா இனி எந்த ஒரு சக்தி மையத்தின் கட்டளையிலும் இயங்கும் நாடு அல்ல; தனது தேசிய நலனுக்கேற்ப உலக சக்திகளுடன் உறவுகளை நிர்ணயிக்கும் நாடு என்ற செய்தி இதன் மூலம் வெளிப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் மூன்றாம் உலகப் போருக்கான அறிகுறியா அல்லது உலக அமைதிக்கான புதிய சக்தி சமன்பாடா என்ற கேள்வி எழுந்தாலும், ஒன்று மட்டும் உறுதி. இந்தியாவை சுற்றிவளைக்க முயலும் சக்திகளுக்கு இது ஒரு தெளிவான எச்சரிக்கை. இந்தியா இனி உலக அரசியலில் பார்வையாளன் அல்ல; நேரடியாக களத்தில் விளையாடும் முக்கிய வீரனாக மாறியுள்ளது.
