
செந்தில் பாலாஜி வழக்கில் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சுமார் 2,000 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்த்து விசாரணையைத் தாமதப்படுத்த தமிழக அரசு முயற்சிப்பதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சரைத் தவிர, வழக்கில் கூறப்படும் இடைத்தரகர்கள் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், விசாரணையை விரைவில் முடிக்க அறிவுறுத்தியுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். சுமார் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியில் வந்தார். இதன்பின் மீண்டும் அவருக்கு தியாகி பட்டம் சூட்டப்பட்டு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் தலையீடு காரணமாக செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதனிடையே செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கின் பிரதான குற்றப்பத்திரிகையுடன் பல துணை குற்றப்பத்திரிகைகளை சிறப்பு நீதிமன்றம் இணைத்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழக அரசு தனது சொந்த அமைச்சரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது. இந்த வழக்கில் 2000 பேருக்கு மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இரு வழக்குகளில் மட்டும் லஞ்சம் கொடுத்ததாக சுமார் 2000 முதல் 2500 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அதற்கான காரணம் என்ன? ஒவ்வொரு வழக்கிலும் 1000 பேரைக் குற்றம்சாட்டினால் விசாரணை எப்போது முடியும்? இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வழக்கு முடிய போவதில்லை. செந்தில் பாலாஜி வழக்கு வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது.
வேலைக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சுமார் 2000 பேரைக் குற்றவாளிகளாக சேர்த்து செந்தில் பாலாஜி மீதான விசாரணையைத் தாமதப்படுத்தத் தமிழக அரசு முயற்சிக்கிறது. அமைச்சரின் வாழ்நாளில் விசாரணைகள் முடிவடையாமல் இருப்பதை உறுதி செய்வதே அரசின் முயற்சியாக உள்ளது. அதேபோல் அமைச்சரைத் தவிர, வழக்கில் கூறப்படும் இடைத்தரகர்கள் யார்?
அமைச்சரின் பரிந்துரையின் பெயரில் செயல்பட்டதாகக் கூறப்படும் அதிகாரிகள் யார்? அப்படி ஆட்களை வேலைக்கு எடுக்கும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் யார்? பணம் கொடுத்துத் தேர்வானவர்களுக்கு நியமனம் வழங்கிய அதிகாரிகள் யார்? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறது.
மேலும் தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த 397 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இது தற்போது திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.