24 special

புலம்பி தவிக்கும் எடப்பாடி தரப்பு மகிழ்ச்சியில் ஒபிஸ்...!

Annamalai,eps
Annamalai,eps

ஒரு பக்கம் மத்திய பாஜக அதிமுக எங்கள் தோழமை கட்சி என்கிறது. ஆனால் தமிழகத்தில் அதிமுக  கட்சியில் உள்ள முதல் மட்ட இரண்டாம் மட்ட தலைவர்களுக்கு அண்ணாமலையைப் பார்த்தாலே எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலவே உள்ளது.


பாராளுமன்ற தேர்தல் எங்களுக்கானது. தமிழக பாஜக தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தலைமை வகிக்கும் என்று அண்ணாமலை  சில மாதங்களுக்கு முன்பு கொளுத்திப் போட்டார். அது அதிமுக விற்குள் சொக்காப்பான் எரிவது போல எரிந்தது.  எடப்பாடி அண்ணாமலையை ஊடகங்கள் தான்  பெரிய ஆளாக காட்டுகின்றது.  நான் 50 வருடமாக அரசியல் களத்தில் உள்ளேன். அவர் நேற்று வந்தவர். ஏதாவது குண்டக்க மண்டக்க கேள்வி கேட்பதை வைத்து நீங்கள் தான் அவரை பெரிசா காட்டுறீங்க என்று பத்திரிக்கையாளர்களிடம் சீறினார். மீண்டும் எடப்பாடி டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு அமைந்தது. வெளியே வந்து பத்திரிக்கையாளர்கள் எடப்பாடியிடம் கேட்ட போது அப்படியே பல்டி அடித்தார். நான் அண்ணாமலையைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.  நீங்கள் தான் நான் சொல்லாததை எழுதி எங்களுக்குள் பிரிவு உருவாக்குறிங்க என்று தோசையைத் திருப்பிப் போட்டார்.

இந்த அளவுக்கு உரசல் நின்றதே என்று இரண்டு பக்கமும் பெருமூச்சு விட்ட போது, ஓபிஎஸ் மகன் பாராளுமன்ற உறுப்பினர் ரவிந்தர்நாத்க்கு மத்திய பாஜக மரியாதையளித்ததை எடப்பாடி ரசிக்கவில்லை.  காரணம் அவர் வென்றது செல்லாது என்று அப்போது தான் நீதிமன்றத் தீர்ப்பு வந்து இருந்தது. தன்னை டெல்லிக்கு வரவழைத்து மோடியின் அருகே அமர வைத்ததோடு தென்னிந்தியாவின் சார்பாளராக மோடிக்கு கௌரவம் செய்யும் பொருட்டு எடப்பாடியாருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை சுட்டி காட்டி தான் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தார்.  அவர் பேசியதைப் பார்க்கும் போது பாதயாத்திரை  மூலம் அண்ணாமலைக்கு கிடைக்கும் ஆதரவு எரிச்சலை உருவாக்கியிருப்பதாக அவரின் சூடான வார்த்தைகள் உணர்த்தியது.

பாதயாத்திரை சென்றவர்கள் யாரும் விளங்கியதாகச் சரித்திரம் இல்லை.  அத்வானி காணாமல் போய்விட்டார். வைகோ முடிந்து போய்விட்டார் என்று பட்டியலிட்டு ஒப்புவித்து கடைசியில் அண்ணாமலையின் வாழ்க்கை என்ன ஆகப் போகின்றதோ என்பதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.  அவர் எங்களுக்கு ஒரு ஆளே இல்லை. ஜஸ்ட் லைக் தட் என்பது போலத் தட்டி விட்டுச் செல்லும் பாணியில் குறிப்பால் சொன்ன போது இது அவர் எதார்த்தமாகப் பேசியதா? இல்லை மேலேயிருந்து வந்த உத்தரவா என்ற குழப்பம் பலருக்கும் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்போது நிதானத்துடன் பதில் அளித்த அண்ணாமலை இன்று பத்திரிக்கையாளர்களிடம் சற்று சூடாகவே பதில் அளித்தாக தோன்றியதாகப் பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.  நான் அரசியல் விஞ்ஞானிகளுக்கெல்லாம் பதில் சொல்லி என் தரத்தைக் கீழே இறக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றார்.

பல அதிமுக அமைச்சர்கள் நாங்களும் திமுக வும் பங்காளிகள். இன்றைக்கு அடித்து கொள்வோம். நாளைக்கு அண்ணன் தம்பி போலக் கூடிக் கொள்வோம் என்பது போன்ற பேச்சுகளை ஒவ்வொருவரும் சர்வ சாதாரணமாக வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.  அதாவது எங்களுக்கு பாஜக வை விட திமுக முக்கியம் என்பது போன்று காட்டிக் கொள்வது அவர்களின் வாடிக்கை.  இது எடப்பாடி உத்தரவின் அடிப்படையில் பேசுகின்றார்களா? இல்லை அவரவர் தங்கள் இருப்புகளைக் காட்டிக் கொள்வதற்காகவும், திமுக தங்கள் கேஸ்களை துரிதப்படுத்திவிடக்கூடாது என்பதற்காகவும் இப்படிப் பேசுவதாக அதிமுக வட்டாரங்களே இதனைப் பெரிசு பண்ணிக் கொள்வதில்லை.

இப்போது ஓபிஎஸ் ம் டிடிவி தினகரனும் எடப்பாடிக்கு ஒரே அணியில் நிற்கின்றனர். இருவரும் கொட நாடு கொலைவழக்கு கேஸ்களை துரிதப்படுத்த வேண்டும். திமுக வும் எடப்பாடியும் கூட்டணியாக இருக்கின்றனர் என்று அவர்கள் பங்குக்குக் கொளுத்திப் போடுகின்றனர். மத்திய பாஜக வுக்கு தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ள எடப்பாடியின் அதிமுகவும் அதன் வசம் உள்ள இரட்டை இலையும் முக்கியமானதாகத் தெரிவதால் எடப்பாடி விசயத்தில்  அடக்கி வாசிப்பதாகவே தெரிகின்றது.

ஆனால் முக்குலத்தோர் வாக்குகள் பெற வேண்டும் என்றால் டிடிவி ஓபிஎஸ் ஒத்துழைக்க வேண்டும் என்பதில் உள்ள எதார்த்தமும் புரிந்த காரணத்தால் அண்ணாமலை கொடநாடு கொலை வழக்கு குறித்து நான் சொல்வதற்கு என்ன உள்ளது? தமிழக அரசு கையில் தான் எல்லாம் உள்ளது என்று நழுவிச் சென்றுவிட்டார்.  கூட ஒபிஎஸ் சிறப்பான தலைவர், முன்னாள் முதல்வர் என்று பாராட்டிப் பேசி அவர் பங்குக்கு அந்த பக்கமும் ஒரு கண் வைத்துள்ளதாகவே தெரிகின்றது.

திமுகவிற்கு வரப் போகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஒரே ஒரு பிரச்சனையாகத் தெரியும். வெற்றியா? தோல்வியா?  போன தேர்தலில் பெற்ற மாதிரி நூற்றுக்கு நூறு பெற முடியுமா? அல்லது எத்தனை பாராளுமன்றத் தொகுதிகளை இழக்கப் போகின்றோம்? ஆனால் அதிமுக விற்கு பல பிரச்சனைகள்?  பாஜக நம் ஓட்டுக்களைப் பிரித்து விடுமா? எத்தனை தொகுதிகளைக் கைவசப்படுத்துவார்கள்? இந்த முறை உள்ளடி வேலை செய்தால் மத்திய பாஜக சும்மாயிருக்குமா? அமைதியாக இருந்தால் அண்ணாமலையின் விஸ்வரூபம் எதிர்கால அதிமுக விற்கு எந்த அளவுக்குப் பாதிப்பை உருவாக்கும் போன்ற பல கேள்விகள் உள்ளது.

இதற்கிடையே செல்லூர் ராஜு போன்றவர்களின் அக்கப் போர்களைச் சமாளிக்க வேண்டியிருப்பதாக எடப்பாடி ஆதரவாளர்கள் புலம்புவதை ஓபிஎஸ் கோஷ்டியினர் ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.