24 special

நோயாளியை அலைக்கழிக்க செய்த மருத்துவர்..! வரிந்து கட்டிய பாஜக தலைவர்!

Narayana Tirupati, Karthikeyan
Narayana Tirupati, Karthikeyan

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுண்ணாம்புகாளை பகுதியைச் சேர்ந்தவர் சபீர் அகமது. இவரது மனைவி மொகரம், இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இரவு 11 மணிக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில், அங்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என கூறப்படுகிறது. அப்போது அவருக்கு மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஊசி செலுத்தி காத்திருக்கும் படி கூறியுள்ளார்.


இருப்பினும் அந்த பெண்ணுக்கு வயிற்று வலி அதிகமானதால் அங்கு பணியில் உள்ள மருத்துவர் கார்த்திகேயன் என்பவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவரிடம் கேட்டுள்ளனர். அப்போது, அந்த மருத்துவர் “இங்கு இப்படித்தான், நான் ஒரு எலும்பு மருத்துவர். என்னால் இதற்கெல்லாம் சிகிச்சை அளிக்க முடியாது, எதையாவது ஒரு ஊசியை குத்தி இவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள். அல்லது நான் பரிந்துரைக்கிறேன், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்,” என ஏளனமாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் பாஜக மாநில துணை தலைவர் நாராயண திருப்பதி இந்த் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதாவது, மருத்துவர்கள் கடவுளுக்கு சமம் என்பார்கள். மருத்துவம் தொழில் அல்ல, புனிதமான சேவை என்பதால் தான் அரசு பல்வேறு சலுகைகளை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி மருத்துவர்களை உருவாக்கி வருகிறது. மொஹரம் என்ற பெண் நோயாளி வயிற்று வலியின் பொருட்டு சிகிச்சை பெற ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் அப் பெண்மணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருமையில் அலட்சியமாக பேசியுள்ளது  கண்டிக்கத்தக்கது. பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தங்களை அடையாளப்படுத்தி கொள்வதற்காக மேல் சட்டை (Coat) அணிவது வழக்கம். 

இந்த வழக்கம் மருத்துவர்களின் மீதான மரியாதையை அதிகரிக்கவும் செய்யும். ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் மேல் சட்டை அணியாமல், வாயில் எதையோ மென்றபடி அலட்சியமாக பேசியுள்ளது மருத்துவ சேவையை அவமதிப்பாக உள்ளது. பொது மக்களின் அறியாமையால் பல மருத்துவமனைகளை, மருத்துவர்களை வசை பாடுவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனாலும், அவர்களின் அறியாமையை புரிந்து கொண்டு சகிப்பு தன்மையோடு மருத்துவர்கள் சூழ்நிலையினை கையாள்வது அவர்களின் மேன்மை மற்றும் பண்பு.  

ஏழை எளிய மக்களின் சிகிச்சைக்காக அரசு சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், அம்மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல். மருத்துவர்கள் தங்களை விட வயதில் குறைந்தவர்களை, குழந்தைகளை கூட அன்போடு, பண்போடு "வாங்க, சொல்லுங்க" என்று அழைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தன்னை விட வயதில் பெரியவரை "நீ, வா, போ" என்ற அலட்சிய வார்த்தைகள் மருத்துவர் என்கிற மரியாதையை இழக்க செய்யும்.

தமிழக அரசு அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட முக்கியமானது, அந்த மருத்துவருக்கு அன்பையும், பண்பையும், கண்ணியத்தையும், பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டிய கடமையையும் உணர்த்த வேண்டியதே. மூத்த அரசு மருத்துவர்கள் அந்த இளம் மருத்துவருக்கு அறிவுரை வழங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டிய அவசியத்தை உரைத்து எதிர் வரும் காலங்களில் அவரை  மாற்றியமைத்துக் கொள்ள உதவ வேண்டும்.