லாட்டரி மாட்டினுக்கு சொந்தமான 7 இடங்களில் நடைபெற்ற சோதனையில் தற்போது முக்கிய ஆவணங்கள் சிக்கி இருக்கும் நிலையில் லாட்டரி மார்ட்டின் உடன் மணல் இராமசந்திரனுக்கு இருக்கும் தொடர்பு குறித்து அமலாக்கதுறை கண்டறிந்து இருக்கும் நிலையில் எதை குறிவைத்து அமலாக்க துறை களம் இறங்கியதோ அந்த தகவல் கிடைத்து இருப்பதால் வரும் நாட்களில் மிக பெரிய அரசியல் மாற்றம் உண்டாகலாம் என கூறப்படுகிறது.சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து, 2019-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மார்ட்டின் முதலீடு செய்திருப்பதையும் கண்டறிந்தனர்.இதனால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து மறுபுறம் விசாரணை மேற்கொண்டு, மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதில், 2019 மற்றும் 2021-ல் மொத்தம் ரூ.277.59 கோடி, 2022-ல் ரூ.173.48 கோடி மதிப்புகளில், அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஏற்கெனவே முடக்கியது.
கடந்த மே மாதம் மீண்டும் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.456.86 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் இணைந்து கோவையில் மார்ட்டின் வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் மார்ட்டினின் வீடு, அருகே உள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் நேற்று சோதனை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது.
இதேபோல், சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள மார்ட்டினின் மருமகன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், திருவல்லிக்கேணியில் உள்ள மார்ட்டினின் மருமகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும், ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் மார்டினின் மகனுக்கு சொந்தமான இடத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.கோவை மற்றும் சென்னையில் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனையின்போது துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸார், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னாள் திமுக அமைச்சர் ஜகத் ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஆவணங்கள் பண பரிமாற்ற விவரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நேற்று லாட்டரி மார்ட்டின் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாகவும் வெளிநாட்டிற்கு சட்ட விரோதமாக பணத்தை அனுப்பியது கண்டறியப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.வரும் நாட்களில் லாட்டரி மார்ட்டின் மற்றும் ஜகத் ரட்சகன் ஆகியோர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பல மர்மங்கள் வெளிவரும் எனவும் எப்படி செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறாரோ அதே போல் மேலும் பலர் சிறை செல்வது உறுதி என அடித்து கூறுகின்றனர் வழக்கின் விவரங்கள் அறிந்தவர்கள்.