கர்நாடகா : கர்நாடகாவிற்கும் சர்ச்சைக்கும் எப்போதும் ஒரு பிணைப்பு உண்டு. ஒரு முதல்வர் பொதுவெளியில் கண்ணீர் விட்டு கதறியழுத சம்பவம் நடந்ததும் அங்கேதான். அதுபோல செய்தியாளர்கள் சந்திப்பில் மைக்கை ஆப் பண்ணாமல் லஞ்சம் குறித்து காங்கிரஸ் எம்பிக்கள் பேசி சர்ச்சை கிளம்பியதும் கர்நாடகாவில் தான். ஹிஜாப் சர்ச்சை எழுந்தது கூட முதலில் கர்நாடகாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கல்லூரியின் முதல்வரை மதசார்பற்ற ஜனதாதள் தலைவர் ஒருவர் பளார் என ஆராயும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை எடுக்க பலதரப்பினர் கோரிக்கை விடுத்திருப்பதோடு அவருடைய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்கள் குவிந்துவருகிறது.
மாண்டியா பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஸ்ரீனிவாஸ் கடந்த 20ம் தேதி நல்வாடி கிருஷ்ணராஜா வெடியார் ஐடிஐ க்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தின் வளர்ச்சிப்பணிகளை பற்றி முதல்வரிடம் கேட்டுள்ளார். கல்லூரி முதல்வர் தெளிவான பதில்களை கூறவில்லை என கருதப்படுகிறது.
இதனால் டென்ஷனான ஸ்ரீனிவாஸ் முதல்வர் கன்னத்தில் மீண்டும் மீண்டும் அறைந்துள்ளார். இந்த சம்பவத்தின் பொது ஒரு பெண் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினர் ஆகியோர் இருந்துள்ளனர். அவர்களும் இந்த சம்பவத்தை அதிர்ச்சியோடு பார்த்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அந்த முதல்வர் புகார் அளிக்கவேண்டும் என்றும் அவருக்கு ஆதரவாக கல்லூரி ஊழியர்கள் மற்றும் சக கல்லூரி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நிர்வாக தரப்பில் எந்த ஒரு புகாரும் கொடுக்கப்படாததால் காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது என மாண்டியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.