24 special

பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண்..!

Stalin
Stalin

தமிழகத்தில் இயங்கும் பேருந்துகள் ஒவ்வொன்றும் ஒருவிதமாக இருக்கின்றது. தினமும் சமூக தளத்தில் பலவகையாக இயங்கும் பேருந்துகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மழை காலத்தில் பேருந்துகளின் உள்ளே குடைபிடித்து செல்வது போன்ற செயல்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இயங்கக்கூடிய ஒரு பேருந்தில் அமர்ந்து சென்ற பயணி ஒருவர் சாலையில் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழகத்தில் திமுக அரசு நிர்வாகம் என்ன நிலைமையில் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இன்று நடந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. சரியாகப் பராமரிக்கப்படாத பேருந்துகளால், மழைக் காலங்களில் பேருந்திற்குள் தண்ணீர் ஒழுகுவது, பழுதடைந்த இருக்கைகள் என, அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் இன்று போக்குவரத்துத் துறை முற்றிலுமாகச் செயலிழந்து இருக்கிறது. போக்குவரத்துத் துறை மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழக அரசுத் துறைகளும் இதைப் போன்ற பரிதாப நிலையில்தான் இருக்கின்றன. 

இந்தநிலையில், தலைநகர் சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்து, என்.எஸ்.கே. நகர் சிக்னலை கடந்த போது, பேருந்தின் பின் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணி கீழே சறுக்கியபடி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பேருந்தை நிறுத்தியதால் உயிர் தப்பினார். ஓட்டை வழியே பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் சிறிது தூரம் தொங்கியபடியே சென்றுள்ளார். 

ஓட்டுநர் பயணிகளின் அலறல் சத்தத்தைக் கேட்ட பின்னர், பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திய பின்னர் கீழே விழுந்த பெண் பயணியை பேருந்தில் வந்தவர்களும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் விரைவாக ஓடிச் சென்று மீட்டதால், பின்னால் வந்த வாகனம் கீழே விழுந்த பெண் பயணி மீது மோதாமல் இருந்தது. இதனாலும் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. கீழே விழுந்த பெண் பயணிக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.  

மாநகரப் பேருந்து பலகை உடைந்து, பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் ஒரு பயணி சாலையில் கீழே விழுந்த சம்பவம் தற்போது சென்னை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்பட்ட பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு, அதில் அனுப்பி வைக்கப்பட்டனர்.  இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் மக்களின் வரிப்பணம் முழுவதும் எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. போக்குவரத்துத் துறையில் என்னென்ன விதங்களில் ஊழல் செய்யலாம் என்று சிந்திக்கும் அமைச்சர், அரசுப் பேருந்துகளைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு அரசு என்ன கைமாறு செய்யும்? எந் விளக்கத்தை அமைச்சர் சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.