24 special

சிக்கி சிக்கி திக்கி தடுமாறும் திமுக அரசு...! முடிவுரை நெருங்கப் போகுதாமே...?

mk stalin, rn ravi
mk stalin, rn ravi

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தான் தற்பொழுது தமிழக அரசியலை உலுக்கியுள்ளது, இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஆளுநர் மாளிகை முன்பு தாக்குதல் நடந்தது ஏன்? எதற்காக இப்படி எல்லாம் நடக்க வேண்டும்? தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, காவல்துறை, உளவுத்துறை ஆகியவை வலுவிழந்து விட்டது என எதிர்கட்சிகள் பல விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே சனாதன விவகாரத்தில் பின்னடைவை சந்தித்த திமுக அரசுக்கு அடுத்தபடியாக மகளிர் உரிமைத் தொகை பெருமளவில் விமர்சனத்தையும், பின்னடைவை ஏற்படுத்தியது.


இப்படி அடி மேல் அடியாக விழுந்து வந்த நிலையில் தற்பொழுது அடுத்தபடியாக திமுக அரசுக்கு பெரிய இடியாக ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து நேற்று சம்பவம் நடந்த உடனே கூடுதல் போலீஸ் ஆணையர் கூறிய விவகாரத்திலேயே பல சிக்கல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது, இந்த விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் 'எந்த நோக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பியதற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா பதில் கொடுத்தது தான் விமர்சனங்களை அதிகப்படுத்தி உள்ளது. 

காவல் துறை கூடுதல் ஆணையர் பதிலளிக்கும்போது, 'ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை, சர்தார் வல்லபாய் படேல் ரோட்டில் தான் வீசப்பட்டுள்ளது, பெட்ரோல் பாட்டில் ஆளுநர் மாளிகையின் மெயின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள தடுப்புக்கு முன்பாக சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் தான் சரியாக விழுந்துள்ளது, ஆளுநர் மாளிகையில் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லை! நல்ல பாதுகாப்பு காரணமாகத்தான் காவலர்கள் பிடித்துள்ளனர், அவர் ஆளுநர் பக்கம் வரவே இல்லை' என சமாளிக்கும் விதமாக கூறியுள்ளார். 

இந்த விவகாரம் காவல்துறை எந்த அளவிற்கு தடுமாறி உள்ளது என்பதை காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது, ஆளுநர் மாளிகை முன்பு தாக்குதல் நடந்தால் என்ன? ஆளுநர் மாளிகையில் தாக்குதல் நடந்தால் என்ன இரண்டும் ஒன்றுதானே ஏன் இப்படி சமாளிக்கும் விதமாக கூடுதல் ஆணையர் கூறுகின்றார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியது வேறு இன்னும் திமுக அரசுக்கு பின்னடைவை அதிகப்படுத்தி உள்ளது. 

இது குறித்து புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் 'ஆளுநர் மாளிகையின் வெளியே பெட்ரோல் குண்டு வீசியவர் உடனே கைது செய்யப்பட்டுள்ளார், மாளிகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது! யாரோ ஒரு மனநோயாளி பெட்ரோல் குண்டு வீசியதற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்? என அவர் பேசியதும் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியாக தமிழ்நாட்டில் எது நடந்தாலும் நாங்கள்தான் காரணம் எனக் கூறும் திமுக அரசு ஏன் தற்பொழுது இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடந்ததற்கு இதுவரையில் பொறுப்பேற்கவில்லை இந்த லட்சணத்தில் தான் மக்களின் பாதுகாப்பு இருக்கிறதா என எதிர்கட்சிகள் விமர்சனத்தை முன்வைக்கின்றன! 

இது குறித்த அரசியல் விமர்சகர்களிடம் கேட்ட பொழுது 'திமுக அரசுக்கு ஆட்சி கலைந்து விடுமோ என்கின்ற பயம் தற்பொழுது வர ஆரம்பித்துவிட்டது! ஏற்கனவே வானதி சீனிவாசன் இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகைமை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார், இது மட்டுமல்லாமல் இந்த ஆளுநர் மாளிகை விவகாரம் உள்துறை அமைச்சகம் அமித்ஷா டேபிள் வரை சென்றுள்ளது. எப்படியும் ஆட்சிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என தற்பொழுது திமுக அரசு என்ன செய்வதென்று தெரியாமல் மாறி மாறி இப்படி பேசுகிறார்கள்' என விமர்சகர்கள் கூறியது வேறு குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விசிக தரப்பில் ஆட்சி கலைப்பிற்கு அடிபோடுகிறார்களோ என சந்தேகத்தை எழுப்பினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..