24 special

ஆளுநர் இதற்கெல்லாம் பயப்படமாட்டார்.! அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்! ஐடியா கொடுத்த டாக்டர் கிருஷ்ணசாமி!

rnravi, krishnasamy
rnravi, krishnasamy

தமிழகத்தில் தற்போது ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசியது தான் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பெட்ரோல் குண்டுவீச்சு – ’தனித்து’ப் பார்க்கக்கூடாது! விழிக்க வேண்டியவர்கள் விழிக்க வேண்டிய நேரத்தில் விழிக்க வேண்டும்!!  சாட்டையை சுழற்ற வேண்டிய நேரத்தில் சுழற்ற வேண்டும் என ஆளுநர் ரவிக்கு வலியறுத்தியுள்ளார். 


இது தொடர்பாக கிருஷ்ணசாமி கூறியது; தமிழக ஆளுநர் மாளிகை இராஜ்பவன் பிரதான வாயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. கடந்த சில வாரங்களாக, தமிழக ஆளுநர் மீதான திமுகவின் முன்னணித் தலைவர்களுடைய தரம்தாழ்ந்த விமர்சனங்களைக் காட்டிலும் இது ஒன்றும் அவ்வளவு மோசமானதாகத் தெரியவில்லை. ஆளுநர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார் என்பது வேறு விசயம். ஆனால், இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்ற ஸ்தானத்திலுள்ள ஜனாதிபதி முர்மு அவர்கள் இன்று சென்னை வரும் வேளையில், அதுவும் அவர் தங்கும் இடமான இராஜ்பவன் மீது இவ்வன்முறை சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்றால், இதை அவ்வளவு எளிதாகக் கடந்து போய்விட முடியாது.

இராஜ்பவன் போன்ற இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றபொழுது அக்குற்றங்களை சுமப்பதற்கென்றே வழக்கமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கிடைத்துவிடுவார்கள். ஆனால், அது பல ஆண்டுகாலம் பழகிப் போனதாலும், அந்தக் கட்டுக்கதைகள் ரொம்ப புளிக்கும் என்பதாலும் இப்பொழுது ஒரு ரெளடி கிடைத்திருக்கிறான். அவன் ஏற்கெனவே ஒரு தேசியக் கட்சியின் அலுவலகம் மீது குண்டு வீசியவன் என்றப் பெருமையோடு உலா வரக்கூடியவன். அவன் வீசிய குண்டைப் பற்றியெல்லாம் கூட நாம் அதிகமாக கவலை கொள்ள வேண்டியதில்லை. அவனைக் கையும் களவுமாக நம்முடையக் காவல்துறையினர் பிடித்துவிட்டார்கள்; இதில் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அவன் பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையை நோக்கி வீசியதற்கு ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறானே, அதுதான் மிகவும் ஆபத்தான ஒன்று; அதுதான் உண்மையில் பெரிய குண்டு. 'மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவு மற்றும் தகுதித் தேர்வை இரத்து செய்ய மறுக்கும் ஆளுநர், அதற்கு உத்தரவிட மறுக்கும் ஜனாதிபதி ஆகியோரை அச்சுறுத்தவே இந்த குண்டு வீசப்பட்டிருப்பதாக அவன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்'.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தமிழக வாக்காளர் பெருமக்களிடத்தில் வாக்குறுதிகளை அளித்து, வாக்குகளை அள்ளி, 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, நான்கரை ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் நீட் தேர்வு இரத்தாகவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஆட்சிக்கு வந்தவுடன் "முதல் கையெழுத்து போட்டு நீட் இரத்து செய்யப்படும்" என்று வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் அவர்களால் அந்த மாய முதல் கையெழுத்தைப் போட முடியவில்லை. 

2019-ல் ஏமாந்த மக்கள், 2021-ல் மோசடிக்கு ஆளான தமிழ் மக்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோசம் போகமாட்டார்கள்; ஏமாறமாட்டார்கள் என்று அசரீரி ஆழ்மனதில் சொல்வதுபோல, 40-க்கு பூஜ்ஜியம்; அதாவது முட்டை தான் கிடைக்கும் என்பதன் குறியீடாக, தானாகவே வலிய வந்து முட்டையைத் தூக்கிக் கொண்டு முதல்வரின் புதல்வர் இன்று ஊர்ஊராகக் கையெழுத்து வாங்குகிறார். 

தமிழக மக்களிடத்தில் அரைநூற்றாண்டு காலம் பொய் பேசியே பழக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு பொய் பேசுவதற்கு நாக்கு கூசப் போவதில்லை; பொய் பேசுவதும், சேற்றை வாரி வீசுவதும் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல; அவர்கள் பேசுவதையெல்லாம் நம்பி ஏமாறுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது என்று இந்த ஸ்டாக்கிஸ்ட்டுகள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமூகம் வேறாக இருக்கிறது என்பது 2024-ல் "பெரிய முட்டை" வாங்கிய பிறகே தெரியும்.

சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர்களே சீர்குலைக்கிறார்கள்! தமிழகம் ஒரு தரப்பினருக்கான வாழ்விடமாக மாற்றப்படுகிறது!! ஆளுநரின் ஆன்மீகப்பணி - அது தனிப்பட்டப் பணி! ஆனால், ஆளும் பணி நிரம்பவே உள்ளது!! அரசியல் சாசனம் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டால் - அடுத்த கட்டத்திற்கு ஆளுநர் செல்ல வேண்டும்! இந்திய உள்துறை கிணற்றில் போட்ட கல்போல் கிடந்தால் - இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்!! விழிக்க வேண்டியவர்கள் விழிக்க வேண்டிய நேரத்தில் விழிக்க வேண்டும்! சாட்டையை சுழற்ற வேண்டிய நேரத்தில் சுழற்ற வேண்டும்!! இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்