நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைக்கு மிக முக்கியமான நேரத்தில் இளையராஜா எம்பி சென்றது தான் தற்போது கடுமையான விவாதங்களை கிளப்பி உள்ளது.
இளையராஜா பாஜகவுடன் கடந்த சில வருடங்களாகவே நெருக்கமாக இருந்து வந்தார். இதன் பயனாக அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவியும் கிடைத்தது. சமீபத்தில் பிரதமர் மோடியை இளையராஜா பாராட்டி பேசி இருந்தார். ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
அதில், பிரதமர் மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று பாராட்டி இருந்தார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதுமே பிரதமர் மோடி பற்றி பேசிய கருத்துக்களை வாபஸ் வாங்க மாட்டேன் என்று தடாலடியாக இளையராஜா குறிப்பிட்டு இருந்தார். மோடியை இப்படி இளையராஜா பாராட்டியது தேசிய அளவில் கவனம் பெற்றது. தேசிய அளவில் விவாத பொருளாக மாறியது.
இளையராஜா என்ன சொன்னார்? பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவு மூலம் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று இருக்கிறார் மோடி, என்று இளையராஜா தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பாஜக எதிர்ப்பாளர்கள் பலர் இளையராஜா கருத்தை கடுமையாக விமர்சித்தனர். அதே சமயம் இளையராஜா தனது கருத்துரிமையை வெளிப்படுத்தி உள்ளார் என்றும் பதில் வாதங்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில்தான் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ராஜ்ய சபா எம்பி பதவி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசுத் தலைவர் 12 பேரை ராஜ்ய சபாவிற்கு எம்பிக்களாக நியமிக்க முடியும். இதில் இந்த முறை இளையராஜா இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்தது. அதன்படியே அவருக்கு எம்பி பதவியும் கொடுக்கப்பட்டது. நியமன எம்பியாக இளையராஜாவுக்கு ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பாஜக இளையராஜாவை தமிழ்நாட்டில் சிறப்பாக பயன்படுத்தும். அடித்தட்டு மக்கள் இடையே பிரபலம் அடைய பாஜக இவரை பயன்படுத்திக்கொள்ளும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இளையராஜாவோ நாடாளுமன்றம் பக்கம் செல்லவே இல்லை. முக்கியமாக பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் முகம் காட்டாமல், நியமன பதவி என்பதால் அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருந்தார்.
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் மிக முக்கியமான கட்டத்தில் ராஜ்ய சபாவிற்கு இளையராஜா சென்றார். நேற்று முதல்நாள் டெல்லி யூனியன் பிரதேச நிர்வாக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. டெல்லி நாட்டின் யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது.
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட மாநில அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. எனினும், உச்ச நீதிமன்றம் உத்தரவு வெளியான உடனேயே, இந்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த நிலையில்தான் அதன் மசோதா முன்பு லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு திமுக , காங்கிரஸ், ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்தன. : டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு ஜனநாயகத்திற்கு விரோதமானது. நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று திமுக எம்பி சிவா பேசினார். அதே சமயம் இந்த மசோதாவிற்கும் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதில் ராஜ்ய சபாவில் மசோதா வெற்றிபெற ஒவ்வொரு வாக்கும் பாஜகவிற்கு அவசியமாக இருந்தது. இதையடுத்து சரியாக நேரம் பார்த்து இளையராஜா ராஜ்ய சபா சென்றார். இந்த மசோதாவிற்கு ஆதரவாகவும் அவர் வாக்களித்து உள்ளார். இத்தனை நாள் அவைக்கு செல்லாமல் இதற்கு மட்டும் நேற்று அவர் அவைக்கு சென்றது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இளையராஜா போன்றவர்களின் ஆதரவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுகவின் ஆதரவு இல்லை என்றால் ராஜ்ய சபாவில் நேற்று இந்த மசோதா வெற்றிபெற்று இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் தமிழக திமுக காங்கிரஸ் இளையராஜா மீது உச்சகட்ட கோபத்தில் இதுக்கிறதாம்....