எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான்.. சினிமாவில் நடித்து நலத்திட்டம் செய்தால் அரசியலுக்கு வந்துவிடலாமா ..? என ஆர்எஸ்.பாரதி பேசிய பேச்சு தான் தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறதுஎவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான். ஒரு நலத் திட்டம் செய்துவிட்டு, நாலு சினிமாவில் நடித்துவிட்டு, 2 மன்றங்களை ஆரம்பித்து விட்டால் உடனே ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது என பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "திமுக எனும் பேரியக்கத்தின் வரலாற்றை நாம் சொல்லியாக வேண்டும். அப்படி சொல்லாத காரணத்தால் தான் எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான். ஒரு நலத் திட்டம் செய்துவிட்டு, நாலு சினிமாவில் நடித்துவிட்டு, 2 மன்றத்தை ஆரம்பித்து விட்டால் உடனே ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் ஏற்படுகிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் நமது இயக்கத்தின் வரலாறை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லாதது தான்.
நம் தானைத் தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை நாம் நடத்துகிறோம் என்று சொன்னால் அது நம் கட்சியின் வரலாற்றைச் சொல்வதுதான். கருணாநிதி வரலாறு என்பது திராவிட இயக்கத்தின் வரலாறு. 50 ஆண்டு காலமாக தலைவராக இருந்து திமுகவை வழிநடத்தியவர் கருணாநிதி.
இன்று தலைமைக் கழகத்தை எடுத்துக்கொண்டால், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, நான் உள்ளிட்ட சிலர் தான் சீனியர்கள். நாங்கள் 3 பேரும் மிசாவில் சிறையில் இருந்தவர்கள். மிசா என்ற ஒன்று இருந்ததே சிலருக்குத் தெரியவில்லை. இந்த இயக்கத்தில் எப்படிப்பட்ட துன்பங்களை எல்லாம் நாம் அனுபவித்தோம் என்பதை நமது இளம் தலைமுறையினருக்கு தெரிந்தால் தான், அவர்கள் உடனே எந்தப் பதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள்." எனப் பேசினார்.
தற்போது அரசியலுக்கு வருவதாக காணப்படும் ஒரே நடிகர் விஜய் தான், ஆர் எஸ் பாரதி மறைமுகமாக விஜயை தான் கடுமையாக சாடியிருக்கிறார். இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள், ஆர் எஸ் பாரதியை நாளா பக்கமும் வெளுத்தெடுத்து வருகின்றனர்... உங்கள் வரலாற்றை மட்டும் தான் நாங்க படிக்கனுமா..? நாங்கள் வரலாறு படைக்க முயற்சிக்க கூடாதா..? உங்கள் கருணாநிதி முதல் இப்போது அமைச்சாராக இருக்கும் உதயநிதி வரை எல்லோரும் சினிமா மூலமாகதானே அரசியலுக்கு வந்தீர்கள்..? எங்கே விஜய் அரசியலுக்கு வந்துவிட்டால் திமுகவுக்கு நெருக்கடி வருமோ என்ற அச்சத்தில் திமுகவினர் இப்படி புலம்பி வருகிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் தாருமாறாக விமர்சித்து வருகிறார்கள்.