24 special

OPS போட்டு வைத்துள்ள அடுத்த திட்டம்..! எடப்பாடி என்ன செய்யப்போகிறார் ?

Ops and eps
Ops and eps

ஓ.பன்னீர்செல்வம்  தர்ம யுத்தம் தொடங்கிய நேற்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் அவர் செல்லும் அரசியல் பாதை சரியானதா? அரசியல் விமர்சகர்கள் சொல்வது என பார்க்கலாம்... 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு அடுத்த படியாக ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக அரசியல் களம் பரபரப்பானது. அதற்கு காரணமாக இருந்த நபர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கைப்பற்ற இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே தர்மயுத்தம் மூண்டது. 

மூன்று முறை முதலமைச்சராக நீடித்த ஓ.பன்னீர்செல்வம் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி எடப்பாடி அணிக்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கினார். சசிகலா சொத்து வழக்கில் கைது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றது, இரட்டை இலை முடக்கம், அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் நீக்கம் என அடுத்தடுத்து தமிழக அரசியல் களம் பரபரக்க ஆரம்பித்தது. 

பல மாதங்களாக நீண்ட இந்த யுத்தம் கடைசியாக துணை முதல்வர் அண்ட் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற டீல் மூலமாக முடிவுக்கு வந்தது. 

அதன் பின்னர் இருதரப்பினரும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பா” என்பது போல் அண்ணன், தம்பிகளாக வலம் வர ஆரம்பித்தனர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு இரு அணிகள் ஓரணியான போதும், மனங்கள் இணையவில்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

முதல் தர்ம யுத்தமே பெரிதாக வெற்றி பெறாத நிலையில் இப்போது தர்ம யுத்தம் 2.ஓவை ஆரம்பித்திருக்கிறார் ஓபிஎஸ். கட்சியை தனிப்பட்ட ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதை தடுக்கவே ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்குவதாக கூறினாலும், ஓபிஎஸ் உள்நோக்கம் என்னவோ எடப்பாடி பழனிசாமி கொஞ்சம், கொஞ்சமாக அவரை ஓரங்கட்டி, தன்னை முதன்மைப்படுத்த ஆரம்பித்தது தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள். 

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவ ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்தம் முக்கியமான காரணம் எனக்கூறப்படுகிறது. ஏனெனில் அதிமுகவில் முதல் தர்மயுத்தம் வெடித்த போது மானாவரியாக ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வைத்த குற்றச்சாட்டுகள், மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கை சரித்தது. மேலும் அதிமுகவின் உட்கட்சி பூசலை வைத்து திமுக எளிதாக வெற்றி பெற்றது, அதிமுக தொண்டர்களை கடும் அதிருப்தியாகவும், ஓபிஎஸ் மீதான வெறுப்பாகவும் மாற்றியது. 

வெளியே அணைந்தது போல் தெரிந்தாலும் உள்ளே நீரு பூத்த நெருப்பாக ஓபிஎஸ் கணன்று கொண்டிருந்ததை 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அனைவரும் ஒருமனதாக முடிவெடுக்க அதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. ஒருவழியாக பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஓபிஎஸை சமாதானம் செய்து, அவர் வாயாலயே எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்தனர் இபிஎஸ் ஆதரவாளர்கள். 

இதனிடையே சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமரவைக்கப்பட்டது. அப்போது யார் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சர்ச்சை வெடிக்க, எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் அறிவிக்கப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கூட எடப்பாடி பழனிசாமிக்காக விட்டுகொடுத்துட்டாரே ஓபிஎஸ் ஒரு தியாகிப்பா என அதிமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட மெய்சிலிர்த்து புகழ்ந்தனர். 

ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைய, அதற்கு இரட்டை தலைமை தான் காரணம். நிச்சயம் ஒற்றை தலைமை வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழ காரணமாக அமைந்தது. தொண்டர்கள் மத்தியில் ஏற்கனவே சர்ச்சைகள் வெடித்த நிலையில், அத்துடன் மாநிலங்களவைக்கு உன் ஆளா அனுப்புறதா... என் ஆளா அனுப்புறதா... என ஓபிஎஸ் - இபிஎஸ் இடையில் நேரடியாகவே யுத்தம் மூண்டது. 

உச்சகட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொதுக்கூட்டத்தில் வெடித்த ஒற்றை தலைமை சர்ச்சை, மீண்டும் ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.ஓவை தொடங்க காரணமாக மாறியது. ஆனால் கடந்த முறை ஓபிஎஸ் பக்கம் நின்ற பொன்னையன், நந்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் இந்த முறை எடப்பாடி பழனிசாமியின் பக்கம் நிற்பது மிகப்பெரிய சறுக்கலாக பார்க்கப்படுகிறது. மேலும் பெரும்பாலான செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்ததால், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். 

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடியது, அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற பிடிவாதத்துடன் ஓ.பன்னீர்செல்வம் தனது அணிக்கான வேட்பாளரை அறிவித்தார். ஏற்கனவே அடுக்கடுக்கான தோல்விகளைக் கண்ட அதிமுக தொண்டர்கள், இடைத்தேர்தலிலாவது ஆறுதல் வெற்றி கிடைக்குமா? என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு முடிவெடுத்தது அவர் மீது இருந்த கொஞ்ச நஞ்ச அனுதாப அலையையும் பின்வாங்க வைத்துவிட்டதாக தெரிகிறது. 

இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பாஜகவின் பேச்சுவார்த்தைக்கு மனமிறங்கி, ஓ.பன்னீர்செல்வம் தனது அணி வேட்பாளரை வாபஸ் பெற வைத்துள்ளார். இதனால் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓபிஎஸ் எடுத்த இந்த முடிவு தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.ஓ.விலும் மீண்டும் தொண்டர்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளார். ஓபிஎஸ் விட்டு கொடுத்த பிறகும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒருவேளை அதிமுக கோட்டை விட்டால் தொண்டர்களின் கோபம் எடப்பாடி மீது திரும்ப வாய்ப்புள்ளது.

இதுவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக அமையும் என்பதால், அதிமுக கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தர்மயுத்தம் 2.ஓ-வில் ஓபிஎஸ் வெல்வாரா? அல்லது மீண்டும் சமாதானக் கொடியை பறக்கவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...